குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2018 4:15 AM IST (Updated: 3 Jun 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாலை அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சின்னம்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட ராசிராவுத்தனஅள்ளி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் குழாய் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பழுது ஏற்பட்டது. இந்த குழாயை சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரி செய்யாமல் கிடப்பில் போட்டது.

இந்த கிராமத்திற்கு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீரும் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் கிராமமக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். தண்ணீருக்காக கிராமமக்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இந்த பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கக்கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் நேற்று ராசிராவுத்தனஅள்ளி கிராமத்திற்கு குடிநீர் சீராக வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் சின்னம்பள்ளியில் இருந்து அரக்காசனஅள்ளி வழியாக தர்மபுரி செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் மற்றும் பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதை யடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story