கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் அளித்த பெண்ணிடம் போலீசார் விசாரணை


கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் அளித்த பெண்ணிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Jun 2018 4:00 AM IST (Updated: 3 Jun 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

மகள் உள்பட கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் அளித்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியின் தாயார், நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், அந்த மாணவி தொடர்பான ஆபாச புகைப்படங்களுடன் கூடிய சி.டி.யையும் இணைத்துக் கொடுத்தார். இதனால் மகளைப்பற்றி தாயாரே புகார் கூறிய இந்த சம்பவம் போலீஸ் அதிகாரிகளிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

எனது உறவுக்காரப் பெண்ணும், அவருடைய உதவியாளரும் சேர்ந்து விபசார தொழில் நடத்தி வருவதாகவும், அவர்கள் எனது மகள் மற்றும் அவளுடன் கல்லூரியில் படிக்கும் சில மாணவிகளின் ஏழ்மையை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும் அந்த பெண் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று புகார் கொடுத்த பெண்ணையும், அவருடைய உறவுக்காரப் பெண், அவருக்கு உதவியாக இருந்ததாக கூறப்பட்ட ஆண் மற்றும் மாணவி ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

அதன்படி மாணவியின் தாயார் நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் நடத்திய போலீஸ் விசாரணையின்போது தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தான்கொடுத்த புகாருடன் இணைக்கப்பட்ட சி.டி.யில் உள்ள புகைப்படங்கள் உண்மையானவை என்றும் கூறினார்.

மாணவியின் உறவுக்கார பெண்ணிடம் நடத்திய விசாரணையில், “தனது பாதுகாப்பில் இருந்து வந்த கல்லூரி மாணவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள ஒரு விடுதியில் தங்கப்போவதாகக்கூறி அங்கு சென்று விட்டார். அவரை நான் அங்குபோய் அடிக்கடி பார்த்து வருவேன். போலீசார் விசாரணைக்கு அழைத்த விவரத்தை அவளிடம் தெரிவித்து, போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறியிருந்தேன். இன்று (அதாவது நேற்று) காலையில் விடுதிக்கு சென்று கேட்டபோது, விடுதியில் உள்ளவர்கள் உங்களைத்தான் பார்க்கச் செல்வதாகக்கூறிவிட்டு சென்றார் என்று தெரிவித்தனர். ஆனால் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை“ என்று கூறினார்.

மாணவி குறித்து போலீசார் விசாரித்தபோது அவருடைய காதலன் பற்றிய விவரம் தெரியவந்தது. காதலனின் தாயாரும் அடிக்கடி விடுதியில் மாணவியை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காதலனின் தாயாரிடம் விசாரணை நடத்தி, காதலனின் செல்போன் எண்ணை வாங்கி விசாரணை நடத்தினர். அப்போது காதலன், போலீசார் தேடும் மாணவி கோவையில் உள்ள தோழி வீட்டுக்குச் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். அவரிடம் நாளை (அதாவது இன்று) போலீஸ் நிலையத்தில் ஆஜராக சொல்லும்படி, அறிவுரை வழங்குமாறு போலீசார் தெரிவித்தனர். மேலும் மாணவியின் உறவுக்காரப் பெண்ணிடமும் போலீசார் நாளை (இன்று) மாணவியை போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்துமாறு கூறி அனுப்பினர்.

மாணவி குமரி மாவட்டத்தில் தான் உறவினர்கள் அல்லது தோழியின் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மாணவி ஆஜராகி உண்மை நிலவரத்தை தெரிவித்தால் தான் தாயாரின் கொடுத்த புகாரில் உண்மை நிலவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story