குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்; 260 வாகனங்கள் மீது நடவடிக்கை


குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறல்; 260 வாகனங்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Jun 2018 3:45 AM IST (Updated: 3 Jun 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 260 வாகனங்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், ஆய்வாளர்கள் பிரபாகரன், பெலிக்சன் மாசிலாமணி ஆகியோர் கடந்த மே மாதம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன் கூறியதாவது:-

போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் மற்றும் குமரி மாவட்ட கலெக்டர் ஆகியோர் உத்தரவின்பேரில் கடந்த மாதம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 1639 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் அனுமதிக்கு புறம்பாக இயக்கப்பட்ட 4 மினி பஸ்கள், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 29 வாகனங்கள், இன்சூரன்ஸ் புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 41 வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி இயக்கப்பட்ட 33 வாகனங்கள், அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற 28 வாகனங்கள் உள்பட மொத்தம் 260 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதமாக ரூ.4 லட்சத்து 33 ஆயிரத்து 150-ம், வரியாக ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 236-ம் ஆக மொத்தம் ரூ.7 லட்சத்து 6 ஆயிரத்து 386 வசூலிக்கப்பட்டது. மேலும் அபராத கட்டணம் ரூ.29 ஆயிரத்து 700 வசூலிக்கப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறு வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன் தெரிவித்தார். 

Next Story