உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குமரி மாணவர்கள் உள்பட 35 பேர் டெல்லி பயணம்


உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குமரி மாணவர்கள் உள்பட 35 பேர் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 3 Jun 2018 4:15 AM IST (Updated: 3 Jun 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

உலக சுற்றுச்சூழல் தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ளும் கருத்தரங்கு நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக குமரி மாவட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 35 பேர் டெல்லி செல்கின்றனர்.

நாகர்கோவில்,

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ந்தேதி (நாளை மறுநாள்) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்றையதினம் பிரதமர் நரேந்திரமோடி பங்குகொண்டு பேசும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக, நாடு முழுவதிலும் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அதன்படி, குமரி மாவட்டத்தை சேர்ந்த 28 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் மற்றும் தூத்துக்குடி துறைமுக பகுதியை சேர்ந்த 4 மாணவர்கள் உள்பட மொத்தம் 35 பேர் டெல்லி அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

டெல்லியில் நடைபெற உள்ள சுற்றுச்சூழல் கருத்தரங்கு தொடர்பான பயண விளக்கக்கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலா அறிவுறுத்தலின்பேரில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் பிருந்தா தலைமைதாங்கினார். மேலும், மாணவ-மாணவிகள் பயணத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கு உள்ள நடைமுறைகள் ஆகியவை குறித்து விளக்கமளித்தார்.

இந்தநிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சகாயதாஸ், நாகர்கோவில் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ஜெயசந்திரன், ஆசிரியர் சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதன்படி, மாணவர்கள் உள்பட 35 பேரும் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு பஸ் மூலம் அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கிருந்து நாளை(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்கள். தொடர்ந்து, அங்கு நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொண்டுவிட்டு 7-ந்தேதி இரவு ஊர் திரும்புகிறார்கள்.

இதற்கான பயண ஏற்பாடுகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்துள்ளார். 

Next Story