ரெயில்வே காலனியில் குப்பைகளை கொட்ட வந்த மாநகராட்சி சரக்கு வேனை சிறைபிடித்த பொதுமக்கள்


ரெயில்வே காலனியில் குப்பைகளை கொட்ட வந்த மாநகராட்சி சரக்கு வேனை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 Jun 2018 4:15 AM IST (Updated: 3 Jun 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே காலனியில் குப்பைகளை கொட்ட வந்த மாநகராட்சி சரக்குவேனை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து அந்த சரக்குவேன் மற்றும் மேஸ்திரியின் அடையாள அட்டை, டிரைவரின் லைசென்னை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி மாநகராட்சியில், குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி விற்பனை செய்து, மாநகரில் குப்பைகள் குவிவது தடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த பகுதிகளில் குப்பைகள் மறுசுழற்சி செய்ய நுண் உர கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று தள்ளுவண்டியில் சேகரிக்கப்படும் குப்பை மாநகராட்சி சரக்கு வேனில் ஏற்றப்பட்டு நுண் உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 30 மற்றும் 31-வது வார்டு கல்கண்டார்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிவாசல் தெரு, தமிழர் தெரு, சாமிநாதன் தெரு, மாருதி நகர், ஜீவா தெரு ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நுண் உரக்கிடங்குக்கு கொண்டு செல்லாமல் பொன்மலை ரெயில்வே காலனி ‘சி’ டைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மாநகராட்சி ஊழியர்கள் கொட்டினர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால் தொற்றுநோய் ஏற்படுவதாகவும், அந்த குப்பைகளுக்கு தீ வைப்பதினால் புகை மூட்டம் ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். மேலும் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும் பலமுறை கூறியும் ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொன்மலையில் உள்ள ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை குப்பைகளை கொட்ட வந்த மாநகராட்சி சரக்கு வேனை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து சரக்கு வேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். டிரைவர் மற்றும் மாநகராட்சி மேஸ்திரியை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்ட மேஸ்திரி, அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை பொக்லைன் எந்திரம் மூலம் நாளைக்குள்(திங்கட்கிழமை) முழுவதுமாக அகற்றிவிடுவதாக எழுத்து மூலம் உறுதியளித்தார். இருப் பினும் மேஸ்திரியின் அடையாள அட்டை மற்றும் டிரைவரின் லைசென்சை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார், கொட்டிய குப்பைகளை அகற்றிவிட்டு அவற்றை பெற்று செல்லும்படி கூறினர். 

Next Story