காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: பிரதமர் மோடிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்த வேண்டும்


காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: பிரதமர் மோடிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 3 Jun 2018 4:30 AM IST (Updated: 3 Jun 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

150 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திய பிரதமர் மோடிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்த வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தஞ்சாவூர்,

பா.ஜனதா சார்பில் உழவனின் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சட்டசபை தொகுதி அமைப்பாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் பாண்டித்துரை, மாவட்ட துணைத் தலைவர் கண்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் உமாபதி, வணிக பிரிவு கோட்ட பொறுப்பாளர் பாலசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர்கள் புரட்சி கவிதாசன், வேதரெத்தினம், கோட்ட பொறுப்பாளர் வரதராஜன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, 150 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திய பிரதமர் மோடியை டெல்டா மண்ணிற்கு அழைத்து விவசாயிகள் பாராட்டு விழா நடத்த வேண்டும். அதற்காக அனைத்து விவசாய சங்கங்களும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பா.ஜனதா கட்சி சார்பில் மிக பிரமாண்டமான அளவில் பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்றார்.

இதில் கோட்ட இணைப் பொறுப்பாளர் கண்ணன், கோட்ட அமைப்பு செயலாளர் அய்யாரப்பன், மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார், வல்லம் பேரூர் தலைவர் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர தலைவர் வினாயகம் நன்றி கூறினார். மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் தஞ்சையில் சைக்கிள் பேரணி நடந்தது.

முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திரத்திற்கு பிறகு நம் நாட்டை பிரதமர் நரேந்திர மோடி உலக அளவில் உயர்த்தி காட்டி இருக்கிறார். 150 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த காவிரி பிரச்சினைக்கு சரியான முறையில், உரிய நேரத்தில் நிரந்தர தீர்வை பிரதமர் மோடி ஏற்படுத்தி இருக்கிறார். இதுவரை ஏளனம் செய்தவர்கள் என்ன செய்ய போகிறார்கள்?. மு.க.ஸ்டாலின் இதற்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறாரா?. குறுவைக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறும் மு.க.ஸ்டாலின், கர்நாடகத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு அவர்களது கூட்டணி கட்சி தானே ஆட்சியில் இருக்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டேன் என்று கூறியவர்களை கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியில் அமர வைத்துள்ளனர். இவர்கள் யாரும் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தியதற்கு பாராட்டு தெரிவிக்கமாட்டார்கள். 50 ஆண்டுகளாக காவிரி பிரச்சினையில் திராவிட இயக்கங்கள் துரோகங்கள் செய்தன. இவற்றை எல்லாம் முறியடித்து பிரதமர் மோடி தீர்வை ஏற்படுத்தி இருக்கிறார். தமிழர்கள் அனைவரும் பிரதமருக்கு நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்.

குறுவை சாகுபடிக்காக 12-ந் தேதிக்குள் தண்ணீர் தமிழகத்திற்கு வர வேண்டும். அப்படி இல்லையென்றால் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட இயக்கத்தினர் கர்நாடகத்திற்கு சென்று தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மறைமுக ஒப்பந்தம் போட்டு கொண்டு 50 ஆண்டுகளாக மக்களை முட்டாள் ஆக்கி கொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story