லாரி டிரைவர் கொலை: தாய்மாமன் உள்பட 3 பேர் சரண்; வாலிபர் கைது


லாரி டிரைவர் கொலை: தாய்மாமன் உள்பட 3 பேர் சரண்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2018 4:30 AM IST (Updated: 3 Jun 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் கொலை வழக்கில் தாய்மாமன் உள்பட 3 பேர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தனர். மேலும் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள அதிமானபுருஷன் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது48). லாரி டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி அவரது வீட்டு வாசல் முன்பு வெட்டிக்கொல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது மனைவி சித்ராவும் படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட சேட்டுவின், தாய்மாமன் அதிமானபுருஷன் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் காந்தி (54), இவருடைய உறவினர் பாபு(27), பாபுவின் நண்பர் சென்னையை சேர்ந்த சக்தி(24) ஆகிய 3 பேர் சேட்டு கொலை தொடர்பாக காளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் வினோத்திடம் சரண் அடைந்தனர். உடனே கிராம நிர்வாக அலுவலர் 3 பேரையும் மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காந்திக்கும், சேட்டுக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல், காந்திக்கு சொந்தமான இடத்தில் மதுக்கடை அமைத்ததை தடுத்தது, சேட்டுவின் மகள் திருமண பத்திரிக்கையில் காந்தியின் பெயர் போடாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சேட்டுவுக்கும், காந்திக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இந்த முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டம் தீட்டியதும், இதில் காந்தி முந்திக்கொண்டு கூலிப்படை உதவியுடன் சேட்டுவை கொலை செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் சேட்டுவை கொலை செய்ததற்கு பணம் வாங்குவதற்காக கூலிப்படையை சேர்ந்த ஒரு வாலிபர் மணல்மேடு பகுதிக்கு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மணல்மேட்டில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், கும்பகோணம் சாக்கோட்டை மருதாநல்லூரை சேர்ந்த கார்த்தி (29) என்பதும், அவர் சேட்டை கொலை செய்த கூலிப்படையை சேர்ந்தவரில் ஒருவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காந்தி, பாபு, சக்தி, கார்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை, மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சேட்டு கொலை வழக்கு தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story