சந்தேக நபர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தக்கூடாது - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


சந்தேக நபர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தக்கூடாது - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 3 Jun 2018 4:15 AM IST (Updated: 3 Jun 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்,

சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சந்தேக நபர்களை பொதுமக்கள் தாக்கக்கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகளை கடத்தி செல்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து கடத்தல் கும்பல் வந்துள்ளார்கள் என்று கடந்த சில நாட்களாக சமுக வலைத்தளங்களில் வீடியோ பதிவு, வாசகங்கள் வெளிவருகிறது. இவ்வாறு வரும் வதந்திகளை நம்பி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு வரும் அடையாளம் தெரியாதவர்களையும், சந்தேக நபர்களையும் தாக்குவது அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் 28-ந் தேதி சங்கராபுரத்தில் இருந்து தனியார் பஸ் மூலம் கச்சிராயப்பாளையம் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த 9 வட இந்தியர்களை குழந்தை கடத்த வந்த கும்பல் என தவறாக எண்ணி அந்த நபர்கள் மீது மாத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக பொதுமக்கள் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுதொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்கள் பகுதிக்கு வரும் அடையாளம் தெரியாதவர்களையும், சந்தேக நபர்களையும் பற்றிய விவரங்களை அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 100 மற்றும் 96554 40092 என்ற எண்ணுக்கோ தெரியப்படுத்த வேண்டுமே தவிர தாக்குதலில் ஈடுபடக்கூடாது. சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சந்தேகப்படும் நபர்களை அடிப்பது, துன்புறுத்துவது போன்ற தாக்குதலை நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக் கப்படும்.

எனவே பொதுமக்களுக்கு யார் மீதும் சந்தேகம் இருந்தால் சட்டப்படி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் தாக்குதல் நடத்துவது போன்ற தவறுகளை செய்ய வேண்டாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story