வரி செலுத்தும் சிறப்பு முகாமில் ரூ.1.31 கோடி வசூல்


வரி செலுத்தும் சிறப்பு முகாமில் ரூ.1.31 கோடி வசூல்
x
தினத்தந்தி 3 Jun 2018 5:48 AM IST (Updated: 3 Jun 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடந்த வரி செலுத்தும் சிறப்பு முகாமில் ரூ.1 கோடியே 31 லட்சத்து 77 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

சேலம்,

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைத்து வகையான வரி இனங்கள் செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நேற்று கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடந்தது. முகாமிற்கு ஆணையாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.

இந்த முகாமில் புதிய கட்டிடத்துக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் இணைப்பு வரி, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைப்பு பெற, பாதாள சாக்கடை வைப்பு தொகை, கட்டிட வரைபட அனுமதி, அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

மேலும் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாறுதலுக்காக விண்ணப்பித்த 12 பேர், அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்த கோரி விண்ணபித்த 8 பேர், புதிய சொத்து வரி செலுத்துவதற்காக விண்ணப்பித்த 8 பேர் என மொத்தம் 28 பேருக்கு விண்ணப்பித்த உடனே பரிசீலனை செய்து உரிய ஆணைகளை ஆணையாளர் சதீஷ் வழங்கினார். இந்த முகாமில் ரூ.1 கோடியே 31 லட்சத்து 77 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டது.

மேலும் புதிய வீட்டு வரி, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு மற்றும் கட்டிட வரைபட அனுமதி கோரி உரிய ஆவணங்களுடன் பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது பரிசீலனை செய்து, 7 நாட்களுக்குள் ஆணைகளை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டார்.

இந்த முகாமில், செயற்பொறியாளர்கள் ரவி, கலைவாணி, உதவி ஆணையாளர்கள் சுந்தரராஜன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story