பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் : மண் இல்லாத தீவன வளர்ப்புமுறை


பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் : மண் இல்லாத தீவன வளர்ப்புமுறை
x
தினத்தந்தி 3 Jun 2018 1:45 PM IST (Updated: 3 Jun 2018 1:35 PM IST)
t-max-icont-min-icon

கறவை மாடுகளின் வளர்ப்பில் பசுந்தீவனத்தின் பங்கு மிக முக்கியமானது. தரமான பசுந்தீவனம் கால்நடைகளின் உற்பத்தி திறன் மற்றும் இனப்பெருக்கத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

நிலத்தின் மூலம் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதற்கு அதிக இடம், வேலையாட்கள் மற்றும் தண்ணீர் வசதி தேவைப்படுகிறது. நகர் புறங்களில் நிலம் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை இருப்பதால், கால்நடைகளுக்கு தீவனம் அளிப்பது சிரமத்திற்குரியதாகிவிடுகிறது. இந்த சிரமத்தைப்போக்க நவீன தீவன வளர்ப்பு முறை கைகொடுக்கிறது. அதன் மூலம் மிக குறைந்த நிலப்பரப்பில், குறைந்த அளவில் தண்ணீரை பயன்படுத்தி, பசுந்தீவனத்தை ஆண்டு முழுவதும் தயார் செய்யலாம். இதற்கு ஹைட்ரோபோனிக் தொழில்நுட்பம் என்று பெயர். இதன் மூலம் சத்துள்ள பசுந்தீவனத்தை கால்நடைகளுக்கு அளிக்க இயலும். எளிய முறையில் பெண்கள் வீடுகளிலேயே பசுந்தீவனத்தை வளர்த்து கால் நடைகளுக்கு அளிக்கலாம்.

இதற்கு ஹைட்ரோபோனிக் பசுமை வீடு உருவாக்கவேண்டும். அது மின்சாரத்தில் இயங்கக்கூடியதாகும். அதற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 60 முதல் 70 யூனிட் மின்சாரம் தேவைப்படும். இதற்கு உதவ எந்திரமும் உள்ளது. அது பற்றி விரிவாக காண்போம்!

இதை படிப்பவர்களுக்கு மண் இல்லாமல் பயிர் வளருமா? வளராதா என்ற சந்தேகம் தோன்றும். ஆனால் மண் இல்லாமல் பயிர் வளரும் என்பதை அறிவியல் நிரூபித்து விட்டது. மண் இல்லாத தீவனம் வளர்ப்புக்கு குறைந்த அளவில் இடம் தேவை. தண்ணீர், பராமரிப்பு நேரம், உடல் உழைப்பு, முதலீடு போன்றவைகளும் குறைந்த அளவிலே தேவை. இதற்கு ரசாயன உரம் எதுவும் தேவையில்லை. குறைந்த இடத்தில் அதிகளவில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து பயனடையலாம்.

இந்த தீவன வளர்ப்புமுறைக்கு செங்குத்தான விவசாயம் என்று பெயர். இதில் தட்டுகளை வைக்க ஸ்டாண்ட் தயார் செய்ய வேண்டும். இதில் ஒரு அடுக்குக்கும் மற்றொரு அடுக்குக்கும் இடையே குறைந்தது ஒரு அடி இடைவெளி தேவை. ஸ்டாண்டின் உயரம் ஆறு அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த ஸ்டாண்டுகளை இரும்பு அல்லது பிளாஸ்டிக் பைப், மரத்தால் தயார் செய்து கொள்ளலாம். தண்ணீர் தெளிக்க ஸ்பிரேயர், விதைகளை ஊறவைக்க பிளாஸ்டிக் வாளி, முளைப்புக் கட்ட சணல் சாக்கு, ஈரப்பதம் மற்றும் குளிர் நிலையை அறிய ஒரு தெர்மா மீட்டர் ஆகியவை தேவைப் படுகிறது. மக்காச்சோளம், கோதுமை, பார்லி போன்ற தானிய வகைகளையும் இந்த மண்ணற்ற விவசாயத்தில் வளர்க்க முடியும்.

உங்களிடம் குறைந்த எண்ணிக்கையில் பசுக்கள் இருந்தால், பசுக்கள் இருக்கும் கொட்டகையிலேயே வளர்க்கலாம். 10 பசுக்களுக்கு மேல் இருந்தால் கிரீன் ஹவுஸ் எனப்படும் பசுமைக்கூடாரம் அமைத்துக் கொள்ளலாம். இதற்காக சூரிய ஒளி நன்கு கிடைக்க கூடிய இடத்தை தேர்வு செய்திட வேண்டும். ஏனெனில் பயிர் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிகவும் அவசியம். சூரிய ஒளியை கடத்தக்கூடிய புற ஊதாக் கதிரால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கெட்டியான பாலித்தீன் ஷீட்டால் சுற்றி மூடலாம். அல்லது 90 விழுக்காடு பச்சை வலையையும் பயன்படுத்தலாம். சூரிய ஒளி உட்புகும் அதே நேரத்தில் பசுந்தீவனம் வளர்க்கும் அறையின் உள்ளே நிலவும் குளிர்நிலையையும், காற்றின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கவும் வேண்டும். வளர்ப்பு அறை எப்போதும் குளுமையாக இருக்கும் வகையில் அந்த அறையில் அரை அடி உயரத்துக்கு ஆற்று மணல் போட வேண்டும்.



ஸ்டாண்டில் வைக்கப்படும் ஒன்றரை சதுர அடி பரப்பளவுள்ள தட்டு ஒன்றுக்கு 300 கிராம் மக்காச்சோள விதை போதுமானதாகும். மக்காச்சோளத்தில் திரட்சி மற்றும் பொலிவைப் பொறுத்து இந்த அளவை கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்.

உங்களுக்கு நாள் ஒன்றுக்கு எத்தனை தட்டு தீவனம் தேவையோ அதைப்போல் எட்டு மடங்கு வாங்க வேண்டும். உதாரணமாக ஒரு நாளைய தேவை பத்து தட்டு தீவனம் என்றால், 80 தட்டுக்கள் வாங்க வேண்டும். பத்து தட்டுகளுக்கு தேவையான 3 கிலோ மக்காச் சோளத்தை நன்கு நீரில் மூழ்கும்படி ஒரு பிளாஸ்டிக் வாளியில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய விதையை சணல் சாக்கில் கட்டி 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைக்க வேண்டும்.

24 மணி நேரம் கழித்து பார்த்தால், விதைகளில் சிறு முளை விட்டிருக்கும். முளைவிட்ட விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில், தட்டு ஒன்றுக்கு சுமார் 300 கிராம் வீதம், இடைவெளியின்றி ஒரு விதை மேல் இன்னொரு விதை விழாத வகையில் பரப்பி சில நிமிடங்கள் காற்றோட்டமாக வைக்க வேண்டும். பின்பு தட்டுக்களை வளர்ப்பு அறைக்கு எடுத்துச்சென்று ஸ்டாண்டில் அடுக்கி வைத்து, நீர் தெளிப்பான் மூலம் தண்ணீரை புகை போல் தெளிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தண்ணீரை ஊற்றக் கூடாது. விதைகளில் எப்போதும் ஈரப்பதம் இருக்கவேண்டும். மண் இல்லாத தீவன பயிருக்கு தண்ணீரின் தேவை மிக குறைவு தான். ஆனால் அடிக்கடி தண்ணீர் தெளிப்பது மிகவும் அவசியம்.

மண்ணற்ற விவசாயத்தில் வளர்க்கப்படும் தீவனத்தில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. புரதம், ஈதர், ஈரப்பதம், சாம்பல், நார்ச்சத்து, வைட்டமின், சுண்ணாம்பு சத்து, செம்புசத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், ெமக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன. இந்த தீவன பயிரின் இலை, வேர், விதைப்பகுதி ஆகியவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். குறைவான அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக அளவு தீவன மகசூல் பெற முடியும். இதன் மூலம் விலை உயர்ந்து கொண்டே போகும் அடர் தீவன செலவை குறைக்கலாம். உற்பத்தி செலவு குறைவதால், கால்நடைகள் மூலம் பால் உற்பத்தி செய்பவர்களுக்கு கிடைக்கும் நிகர லாபம் அதிகரிக்கும்.

அசைபோடும் பிராணிகளோடு அசைபோடாத முயல், குதிரை, கோழி, வான்கோழி, வாத்து போன்றவற்றுக்கும் இதனை தீவனமாக கொடுக்கலாம். இந்த பசுந்தீவனத்தை பசுக்களுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால், பாலின் அளவு அதிகரிக்கும்.

உற்பத்தி செய்யப்பட்ட பசுந்தீவனம் வேர்காலால் பிணைந்து காணப்படும். இதனால் கால்நடைகளுக்கு உண்ண கடினமாக இருக்கும். எனவே இதில் இருந்து பெறப்பட்ட பயிர்களை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதை அரை மணி நேரம் நிழலில் காயவைத்து பின்னர் தீவனமாக அளிக்கலாம். கறவை மாடுகளுக்கு தினமும் 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலும், ஆடுகளுக்கு அரை கிலோ முதல் 2 கிலோ வரையிலும் இதனை கொடுக்க லாம்.

நகர்புறங்களில் 2 முதல் 4 பசுமாடுகள் வைத்து இருப்பவர்களும், நிலம் இல்லாதவர்களும் இந்த முறையை பயன்படுத்தலாம். சத்துகள் நிறைந்த சுவைமிக்க பசுந்தீவனத்தை அளிப்பதால் பாலில் கொழுப்பு தன்மை அதிகரிக்கிறது. மேலும் கால்நடைகளின் இனப்பெருக்க திறனும் மேம்படும். நிலத்தில் வழக்கமான முறையில் ஒரு கிலோ பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய 60 முதல் 70 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால் இந்த முறையில் 2.5 லிட்டர் தண்ணீரே போதுமானதாகும். எளிய வேலை என்பதால் வீட்டில் உள்ள பெண்களே பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து பயன்பெறலாம்.

ஐரோப்பிய நாடுகளில் பனி மூடிய சீதோஷ்ணநிலை ஏற்படும்போது பசுந்தீவனம் கிடைக்காத நிலை உருவாகும். அப்போது இந்த முறையில்தான் தீவனத்தை உற்பத்தி செய்கிறார்கள். தற்போது தமிழகத்தில் இந்த தீவன வளர்ப்பு முறை பயன்பாட்டில் உள்ளது.

(அடுத்த வாரம்: அசோலா வளர்ப்புமுறை)

தகவல்: பி.முரளி, உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கடலூர். 

Next Story