காய்க்கிறது ‘கலர் வெண்டைக்காய்’


காய்க்கிறது ‘கலர் வெண்டைக்காய்’
x

கர்நாடகாவை சேர்ந்த விவசாய தம்பதியர்களான சங்கர் - ரூபா ஆகிய இருவரும் 15 விதமான வெண்டைக்காய்களை விளைவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

பெரியபாட்னா தாலுகாவில் உள்ள ஹிட்னேஹேபாஜிலு கிராமத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் . அங்குள்ள தங்கள் விவசாய நிலத்தில் அரை ஏக்கர் பரப்பளவில் விதவிதமான வெண்டைக்காய் செடிகளை வளர்த்திருக்கிறார்கள். இயற்கை விவசாய சாகுபடி முறையை பின்பற்றியதோடு மரபணு மாறாத இந்திய விதைகளையே பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பாரம்பரிய பயிர் சாகுபடி முறையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பெங்களூருவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று விவசாயி கள் மத்தியில் விழிப்புணர்வை விதைத்து வருகிறது. பெரியபாட்னா பகுதியில் நீண்டகாலமாக புகையிலையே அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சங்கர்-ரூபா தம்பதியரின் குடும்பத்தினரும் புகையிலை பயிரையே சாகுபடி செய்து வந்திருக்கிறார்கள்.

அந்த சூழ்நிலையில் தொண்டு நிறுவனம் சார்பில் வினியோகிக்கப்பட்ட விதைகள் விவசாயிகள் பலரின் கவனத்தையும் ஈர்த் திருக்கிறது. அந்த விதைகள் ஒரே காய் கறியை பல வண்ணங்களில் விளைவிக்கும் தன்மை கொண்டவையாக இருந்ததால் விவசாயிகள் அவைகளை பயிரிட ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள். சங்கர்-ரூபா தம்பதியரும் விதவிதமான வெண்டைக்காய் விதைகளை வாங்கி பயிரிட்டிருக்கிறார்கள்.

ஒடிசாவை சேர்ந்த வெண்டைக்காய் ரகமான ஸ்டார் ஓக்ரா, புதுச்சேரியை சேர்ந்த ரெட் பிகிந்தி, இலங்கையை சேர்ந்த ஸ்ரீ பிகிந்தி உள்பட பல்வேறு ரகத்தை சேர்ந்த வெண்டைக்காய்களை ஒரே இடத்தில் விளைவித்துவிட்டார்கள். இவை அனைத்தும் ஒரே பருவ காலநிலையில் விளைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே தோட்டத்தில் குறைந்தபட்சம் 25 வகையான வெண்டைக்காய்களை விளைவிக்க வேண்டும் என்பது இந்த தம்பதியரின் விருப்பமாக இருக்கிறது.

‘‘நாங்கள் செயற்கை உரங்களை பயன் படுத்துவதில்லை. மண் வளத்தை காக்கும் இயற்கை உரத்தையே உபயோகிக்கிறோம். மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடுகையில் இந்தவகை வெண்டைக்காய்களை விளைவிக்க அதிக பணம் செலவாவதில்லை’’ என்கிறார்கள்.

இந்த தம்பதியர் வெண்டைக்காய் மட்டுமின்றி தக்காளி மற்றும் கத்தரிக்காய் ரகங் களையும் விதவிதமாக பயிர் செய்கிறார்கள். இயற்கை விவசாயத்தில் விதவிதமான காய்கறி ரகங்களை விளைவிக்க அந்த பகுதி விவசாயிகளும் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள்.

இதுபற்றி தோட்டக்கலை கல்லூரி உதவி பேராசிரியர் ஏ.எஸ். அரவிந்த் குமார் கூறுகையில், ‘‘மற்ற காய்களுடன் ஒப்பிடும்போது இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும். இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் விதவிதமான ரகங்களை கொண்ட காய்கறிகளை வளர்க்க ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குரியது. இனி வரும் காலங்களில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புதுரக வெண்டைக்காய்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் அதன் விலையும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது’’ என்கிறார்.

இந்த வகை வெண்டைக்காய் ரகங்கள் தமிழ்நாட்டிலும் சில இடங்களில் பயிரிடப்படுகிறது. 

Next Story