குழந்தைகளிடம் அன்பு செலுத்தினால் நாய்கள் பொறாமைப்படுகின்றன


குழந்தைகளிடம் அன்பு செலுத்தினால் நாய்கள் பொறாமைப்படுகின்றன
x
தினத்தந்தி 3 Jun 2018 4:47 PM IST (Updated: 3 Jun 2018 4:47 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு எப்போதும் விளையாடத் துணை தேவை. பெரும்பாலும் அவைகள் தன் வயதைஒத்தவர்களிடமும், தன்னைவிட வயது குறைந்தவர்களிடமுமே அதிக நேரம் விளையாட விரும்புகின்றன.

குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளிடமும் அதிக பாசம்காட்டி விளையாட விரும்பும். ஆனால் வளர்ப்பு பிராணிகளால் குழந்தைகளுக்கு ஆபத்தும் ஏற்படக்கூடும் என்பதால், மிகுந்த கவனம் தேவைப்படும்.

குழந்தைகள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் காதைப் பிடித்து இழுக்கும். வாலைப் பிடித்து கடிக்கும். இந்த இம்சைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் செல்லப்பிராணிகள் திருப்பி கடித்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் எவ்வளவுதான் நல்ல பிராணியாக இருந்தாலும் குழந்தை களிடமிருந்து அவைகளை சற்று விலக்கி வையுங்கள்.

குழந்தைகளுக்கும்- செல்லப்பிராணிகளுக்கும் இடையே எப்போதும் தேவையான இடைவெளி இருக்கவேண்டும். பிராணிகளிடம் எப்படி பழகவேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு உடனிருந்து கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளின் கண்களை நோண்டுவது, விளையாட்டாக கையில் கிடைத்ததை அதன் மீது தூக்கி எறிந்து விளையாடுவது, அவைகளை பயமுறுத்துவது போன்றவைகளில் ஈடுபட குழந்தைகளை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

நாய்கள் மனிதர்களிடம் மிக அன்போடு நன்றியோடு பழகக்கூடியவை. அவைகளுக்கும் குழந்தைகளைப் போல் அன்பு தேவை. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செல்லப்பிராணிகளை தூர விலக்கும் போது அவைகள் மனதுக்குள் வருத்தப்படும். அதுவே குழந்தைகள் மீது அவைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் வளர்ப்பு பிராணிகள் மீதும் பாசம் செலுத்துங்கள்.

குழந்தைகளோடு நாய்களை விளையாட அனுமதிக்கலாம். ஆனால் அப்போது பெற்றோர் அருகில் இருக்க வேண்டும். செல்லப் பிராணியோடு எப்படி விளையாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். படிப்படியாக அவர்கள் கற்றுக்கொள்வார்கள். பிராணிகள் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க நீங்கள் செயல்கள் மூலம் சொல்லிக் கொடுங்கள். அவைகளும் புரிந்து கொள்ளும்.

வளர்ப்பு நாய்களை குழந்தைகளின் படுக்கையில் புரள அனுமதிக்க வேண்டாம். குழந்தைகள் சாப்பிடும் தட்டில் வாய்வைக்கவோ, குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை முகர்ந்து பார்க்கவோ வாய்ப்பளிக்க வேண்டாம்.

செல்லப்பிராணிகள் அன்பிற்காக ஏங்குபவை. அவைகளிடம் அன்பாக பழகுங்கள். அதேநேரம் குழந்தைக்கு ஆபத்து நேராமலும் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தையால் அவைகளுக்கும் ஆபத்து வரக்கூடாது. ஒருபோதும் செல்லப்பிராணியையும் குழந்தையையும் தனியாக பழக அனுமதித்து விடக்கூடாது.

செல்லப்பிராணியோடு குழந்தை எவ்வளவுதான் அன்போடு பழகினாலும் உங்கள் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே ஆபத்துகளை தவிர்க்கலாம். வெளியில் வாக்கிங் போகும்போது செல்லப்பிராணி, குழந்தை இரண்டையும் அழைத்துச் செல்லலாம். அப்படி செய்தால் வளர்ப்பு பிராணிகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை அவை புரிந்துகொள்ளும். குழந்தைக்கும்- வளர்ப்பு பிராணிக்கும் இடையே நல்ல புரிதலும் உருவாகும்.

பொதுவாகவே வீட்டில் இருக்கும் செல்லப்பிராணி களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். தடுப்பு ஊசிகளும் போட வேண்டும். செல்லப் பிராணி களோடு விளையாடுவது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனாலும் சில நேரங்களில் வளர்ப்பு பிராணிகளை தள்ளிவைக்கவேண்டும்.

குழந்தைக்கு உணவூட்டும்போது வளர்ப்பு பிராணிகளை அருகில் சேர்க்கவேண்டாம். அதன் உரோமம் உணவுப் பொருளில் உதிரக்கூடும். குழந்தைகள் வீறிட்டு அழுவதும், கத்துவதும் பிராணிகளுக்கு திகிலை ஏற்படுத்தும். அப்போது அவைகளின் அச்சத்தை போக்கவேண்டும். நாளடைவில் பழகிவிடும். குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்துவதை பார்த்து சில நேரங்களில் நாய்கள் பொறாமைப்படுவதுமுண்டு.

அப்போது அவைகள் மீதும் அக்கறை காட்டுகிறோம் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக நடந்துகொள்ளவேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளை செல்லப்பிராணிகள் புரிந்துகொள்ள சில காலம் ஆகும். குழந்தைகளுக்கும், பிராணிகளோடு எப்படி பழகவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள அவகாசம் தேவை. அதுவரை இருவரையும் நம் கண்காணிப்பில் வைத்துக்கொள்ளவேண்டும்.

குழந்தைகளுக்கு மற்ற உயிர்களை நேசிக்கும் பண்பு இளமையிலேயே ஏற்பட செல்லப்பிராணிகள் உதவுகின்றன. விளையாட்டின் எல்லை என்ன என்பதையும் வளர்ப்பு பிராணிகள் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். அதனை அடிப்பது, காதை பிடித்து இழுப்பது, கடிப்பது போன்றவை விளையாட்டல்ல துன்புறுத்தல் என்பதையும் குழந்தை தெரிந்துகொள்கிறது.

அன்பை மற்ற உயிரினங்களோடு பகிர்ந்துகொள்ளவும் வளர்ப்பு பிராணிகள் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. செல்லப்பிராணிகள் குழந்தை களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. அன்போடும், நன்றியோடும் நடந்துகொள்கிறது. குழந்தைகளின் மகிழ்ச்சி, உற்சாகத்திற்கு செல்லப்பிராணிகள் காரணமாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனை கடைப்பிடிக்க கற்றுக்கொடுங்கள். 

Next Story