திண்டுக்கல்–சென்னை இடையே புதிய ரெயில் சேவை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வலியுறுத்தல்


திண்டுக்கல்–சென்னை இடையே புதிய ரெயில் சேவை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jun 2018 4:15 AM IST (Updated: 4 Jun 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்–சென்னை இடையே புதிய ரெயில் சேவை தொடங்க வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடந்த விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் இருந்து 3–வது நடைமேடைவரை ரூ.60 லட்சம் செலவில் நடைமேம்பாலம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் 1, 3, 4–வது நடைமேடைகளில் தலா ரூ.50 லட்சம் செலவில் 3 லிப்டுகள், இலவச வை–பை இணையதள சேவை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் தொடக்க விழா திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு நடைமேம்பாலத்தை திறந்து வைத்து, 3 லிப்டுகள், வை–பை சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:–

ரெயில்வே துறையில் மத்திய அரசு பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது. பிற ரெயில் நிலையங்களை ஒப்பிடுகையில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. உயர் வகுப்பு பயணிகளுக்கு கட்டணத்துடன் கூடிய காத்திருக்கும் அறை விரைவில் வர இருக்கிறது. பெரும்பாலான ரெயில்கள் 3, 4–வது நடைமேடைகளில் நிறுத்தப்படுவதால் பயணிகள் சிரமப்பட்டனர்.

இந்த லிப்டு வசதி மூலம் பயணிகள் பயன்பெறுவார்கள். அதேநேரம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட ரெயில்களை முதலாவது நடைமேடையில் நிறுத்த வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு தனி ரெயில் சேவை இல்லை. மதுரை கோட்டத்தில் முக்கிய ரெயில் நிலையமாக திண்டுக்கல் உள்ளது. எனவே, திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு ரெயில் சேவை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பங்கேற்ற உதயகுமார் எம்.பி. பேசுகையில், திண்டுக்கல்–சென்னை இடையே புதிதாக ரெயில் சேவை தொடங்க வேண்டும். திருச்செந்தூர் பயணிகள் ரெயில், பொள்ளாச்சியிலேயே கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பழனி பயணிகள் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க அந்த ரெயிலில் பழனியில் கூடுதலாக 2 பெட்டிகளை இணைக்க வேண்டும். சின்னாளப்பட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் பயன்பெறும் வகையில், அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் மைசூரு எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் முன்பு போன்று 2 முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் நீனுஇட்டியரா பேசுகையில், திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு 15 ஆயிரம் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் ஏ கிரேடு பெற்றுள்ளது. எனவே, கூடுதல் வசதிகள் செய்யப்படும். மதுரை கோட்டத்தில் கடந்த ஆண்டு 42 லட்சம் பயணிகள் ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.42 கோடியே 60 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த 2016–2017–ம் ஆண்டில் ரூ.37 கோடியே 70 லட்சமாக இருந்தது. மேலும் கடந்த ஆண்டு ஒட்டுமொத்த வருவாய் ரூ.61 கோடியே 80 லட்சம் ஆகும். தென்னக ரெயில்வேயில் குறித்த நேரத்தில் ரெயில்களை இயக்குவதில் மதுரை கோட்டம் முதலிடத்தில் உள்ளது, என்றார்.

இந்த விழாவில் திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ், மதுரை ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் முரளிகிருஷ்ணா, திண்டுக்கல் ரெயில்நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story