காவிரி விவகாரத்துக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த பின் ரங்கநாதன் பேட்டி


காவிரி விவகாரத்துக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த பின் ரங்கநாதன் பேட்டி
x
தினத்தந்தி 4 Jun 2018 4:30 AM IST (Updated: 4 Jun 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்துக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உடனான சந்திப்புக்கு பின்னர் மன்னார்குடி ரங்கநாதன் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு நேற்றுமுன்தினம் இரவு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதனை அவருடைய வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து பேசினார். அப்போது ரங்கநாதனுக்கு, பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வை ஏற்படுத்த காரணமாக இருந்தவர் ரங்கநாதன். அதற்காக பாராட்டு மற்றும் நன்றி தெரிவிப்பதற்காக அவரை சந்தித்தேன் என கூறினார். இதைத்தொடர்ந்து மன்னார்குடி ரங்கநாதனும், பொன்.ராதாகிருஷ்ணனும் தனியாக ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின்னர் மன்னார்குடி ரங்கநாதன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு ஒரு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எதிர்காலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் நலன் பயக்கும் வகையிலான திட்டங்களை அரசிடம் இருந்து கேட்டு பெறுவதற்காக, விவசாயிகளை ஒருங்கிணைப்பது குறித்து மத்திய மந்திரியுடன் ஆலோசித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் செல்வம், நிர்வாகிகள் கண்ணன், ஞானம் ரவிச்சந்திரன், ராகவன், மன்னார்குடி நகர தலைவர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story