பந்தலூர் அருகே நாக்கு துண்டிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி சாவு


பந்தலூர் அருகே நாக்கு துண்டிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 4 Jun 2018 4:00 AM IST (Updated: 4 Jun 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே நாக்கு துண்டிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா படச்சேரி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கிராமத்திற்குள் ஒரு காட்டு யானை ஒன்று புகுந்தது. உடல் மெலிந்த நிலையில் காணப்பட்ட அந்த காட்டு யானை, அங்கும், இங்குமாக சுற்றி திரிந்தது. பின்னர் அங்குள்ள ஒரு நடைபாதையில் படுத்து விட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் காட்டு யானையை காண குவிந்தனர்.

காட்டு யானை குறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் கூடலூர் கோட்ட வன அதிகாரி ராகுல், வனச்சரகர்கள் மனோகரன், கணேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு காட்டு யானை உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை பார்த்தனர். இதனை தொடர்ந்து கால்நடை டாக்டரை வரவழைத்து காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து அங்கு குவிந்ததால், பாதுகாப்பு கருதி காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதற்காக கிரேன் வரவழைக்கப்பட்டு, ஒரு லாரியில் காட்டு யானை தூக்கி வைக்கப்பட்டது.

இதன்பின்னர் காட்டு யானை அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து சேரம்பாடி கால்நடை டாக்டர் பிரபு காட்டு யானைக்கு சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் காட்டு யானை இறந்தது. இறந்த பெண் காட்டு யானைக்கு சுமார் 35 வயது இருக்கும்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

இறந்த பெண் யானையின் நாக்கு கடந்த சில நாட்களுக்கு முன் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த யானை சாப்பிட முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் குடலில் புண்கள் ஏற்பட்டதால் இறந்து உள்ளது. யானையின் நாக்கு எதனால் துண்டிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும். இதுகுறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பந்தலூர் அருகே காட்டுயானை நாக்கு துண்டிக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்தது சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story