நீர்வரத்து வினாடிக்கு 1,700 கனஅடியாக குறைந்தது ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


நீர்வரத்து வினாடிக்கு 1,700 கனஅடியாக குறைந்தது ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 4 Jun 2018 4:15 AM IST (Updated: 4 Jun 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,700 கனஅடியாக குறைந்தது. மேலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

பென்னாகரம்,

கர்நாடக மற்றும் தமிழக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், பெண்கள் குளிக்கும் பகுதிகளில் தண்ணீர் கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று படிப்படியாக குறைந்து வினாடிக்கு 1,700 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வள அதிகாரிகள் காவிரி நுழைவிடமான கர்நாடக, தமிழக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்தநிலையில் வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடை (லைப் ஜாக்கெட்) அணிந்து காவிரி ஆற்றில் பாறைகளுக்கு இடையே பரிசலில் சென்றனர். பின்னர் அவர்கள் தொங்கு பாலம், பார்வை கோபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகளில் மீன் விற்பனை படுஜோராக நடைபெற்றது. நேற்று ஒகேனக்கல்லில் பலத்த மழை பெய்தது. இதனை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே சுற்றித்திரிந்தனர்.மணல் திட்டு, ஆலாம்பாடி, மெயின் அருவி பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story