உசிலம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; 2 பேர் பலி
உசிலம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ளது சக்கிலியங்குளத்தை சேர்ந்தவர் குண்டுமணி மகன் சிவானந்த்(வயது 22). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது.
ராசுத்தேவர் மகன் கொடிவீரணன்(32). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. பெயிண்டர். இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டிக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை சிவானந்த் ஓட்டினார்.
பின்னர் அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். அப்போது உசிலம்பட்டியை அடுத்து கொங்கபட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டு விட்டு சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிவானந்த், கொடிவீரணன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.