திருவிடைமருதூர் அருகே பெயிண்டர் கொலை: முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவர் கைது


திருவிடைமருதூர் அருகே பெயிண்டர் கொலை: முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2018 4:00 AM IST (Updated: 4 Jun 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூர் அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருச்சேறை இஞ்சிக்கொல்லை பெரிய தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகன் சூர்யா(வயது28). பெயிண்டர். இவருடைய நண்பர் அதே பகுதியில் உள்ள பத்மசாலிய தெருவை சேர்ந்த முருகன். இதே பகுதியை சேர்ந்தவர் ரவி (45). இவருடைய மனைவி புவனேஸ்வரி(38) திருச்சேறை ஊராட்சியின் முன்னாள் தலைவி ஆவார். முருகன், ரவி ஆகியோருடைய வீடுகள் எதிரெதிரே உள்ளன. தி.மு.க.வில் ஊராட்சி செயலாளராக இருந்த ரவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சூர்யாவுக்கும், முருகனுக்கும் பத்மசாலி தெருவில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை சமாதானம் செய்ய முயன்ற ரவியை, சூர்யா தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

கைது

இதனால் சூர்யா-ரவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ரவி அரிவாளால் சூர்யாவை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சூர்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகவுரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக நேற்று ரவியை போலீசார் கைது செய்தனர். 

Next Story