சங்கரன்கோவிலில் முன்னாள் தி.மு.க. கவுன்சிலரின் மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு
சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலரின் 3 மோட்டார்சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலரின் 3 மோட்டார்சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் தி.மு.க. கவுன்சிலர்சங்கரன்கோவில் கக்கன்நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் ஜெக ஜீவன்ராம் (வயது 43). இவர் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் ஆவார். தற்போது ஒப்பந்ததாரராக பணி செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவில் குடும்பத்துடன் மொட்டை மாடியில் படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளார். வீட்டின் முன்புறம் 3 மோட்டார்சைக்கிள்களை நிறுத்தி இருந்துள்ளார். நள்ளிரவில் பிளாஸ்டிக் கருகும் வாசனை அறிந்து மேலே இருந்து பார்த்துள்ளார். அப்போது மோட்டார்சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளா£ர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கீழே வந்து மோட்டார்சைக்கிள்களில் எரிந்த தீயை கட்டுப்படுத்தி அணைத்துள்ளார்.
மோட்டார்சைக்கிள் எரிந்து சேதம்அதற்குள் ஒரு மோட்டார்சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதமானது. மற்ற இரு மோட்டார்சைக்கிள்களும் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும் வீட்டின் எதிரில் இருந்த பிளாஸ்டிக் குழாய்களும் தீயில் எரிந்து நாசமாயின. இதுபற்றி சங்கரன்கோவில் டவுன் போலீசில் ஜெகஜீவன்ராம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வருடம் அவரது வீட்டின் அருகில் உள்ள இவரது சகோதரர் மாரியப்பன் என்பவருடைய வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் இதே போல் நள்ளிரவில் எரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.