கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் பயங்கரவாதிகளுக்கு சப்ளையா? தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க தீவிர நடவடிக்கை


கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் பயங்கரவாதிகளுக்கு சப்ளையா? தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க தீவிர நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2018 4:00 AM IST (Updated: 4 Jun 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் அச்சடிக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் பயங்கரவாதிகள், நக்சலைட்டுகளுக்கு சப்ளை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதும் போலீசார், தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கோவை,

கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி கள்ள நோட்டுகளை அச்சடித்த ஆனந்த் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அந்த அறையில் இருந்து ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய ஜெராக்ஸ் எந்திரங்கள், பிரிண்டர் கருவி, கள்ள நோட்டுகளை கத்தரிக்கும் கருவி, வெள்ளை காகித கட்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், கோவை மாவட்டம் காரமடை நால்ரோடு பகுதியைச் சேர்ந்த சுந்தர் (38), கோவை வடவள்ளியை சேர்ந்த கிதர் முகமது (55) ஆகியோருடன் சேர்ந்து கள்ளநோட்டுகளை அச்சடித்ததாக ஆனந்த் கூறினார். தற்போது சுந்தர், கிதர் முகமது ஆகிய 2 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

இந்த கள்ள நோட்டு கும்பல் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள வெளியாகி உள்ளன. இவர்கள் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கள்ள நோட்டுகள் அச்சடித்து உள்ளனர்.

இந்த கும்பலின் தலைவனாக சுந்தர் செயல்பட்டு உள்ளார். இவரது கூட்டாளியான கிதர் முகமதுவின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு ஆகும். இவர்கள் இருவர் மீதும் கடந்த 2012-ம் ஆண்டிலேயே கோவை சரவணம்பட்டி, போத்தனூர் பகுதிகளில் கள்ள நோட்டுகள் அச்சடித்த வழக்குகள் உள்ளன. சி.பி.சி.ஐ.டி. போலீசிலும் வழக்கு இருக்கிறது.

சுந்தர், கிதர் முகமது ஆகிய 2 பேரும் கள்ள நோட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது, மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் சிறைக்கு சென்ற ஆனந்துடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என 3 பேரும் திட்டம் தீட்டினர்.

சமீபத்தில் ஆனந்த் சிறையில் இருந்து வெளிவந்த போது, சுந்தர் அவரை தொடர்பு கொண்டார். கள்ளநோட்டு அச்சடிக்க கடை எடுத்து தந்தால் பணம் தருவதாக ஆசை காட்டினார். அதன்பேரில் அவர், ரூ.2,700 வாடகைக்கு அறை எடுத்து கொடுத்து உள்ளார்.

எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கள்ள நோட்டுகளை அச்சடிப்பதில் சுந்தர் கைதேர்ந்தவர். அச்சடித்த கள்ள நோட்டுகளை பல்வேறு ஏஜெண்டுகள் மூலமாக புழக்கத்தில் விடுவது கிதர் முகமதுவின் வேலையாக இருந்தது.

இங்கு அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை திருப்பூர், நீலகிரி உள்பட தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் புழக்கத்தில் விட்டு இருக்கிறார்கள்.

இது குறித்து தனிப்படை போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த கும்பலின் தலைவன் சுந்தர், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்துள்ளார். கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, கவுண்டம்பாளையம், வடவள்ளி என பல இடங்களில் தங்கி இருந்தது தெரியவந்து இருக்கிறது. கேரள மாநிலம் ஆனைக்கட்டி பகுதியில் இவர் பெரும்பாலும் தங்கி இருந்துள்ளார். இந்த பகுதி கேரள, தமிழ்நாடு எல்லைப்பகுதியாகும். அங்கிருந்தபடி, கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளார். ஆனைக்கட்டி பகுதி நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதி. எனவே அவர்களுக்கு கள்ளநோட்டுகள் சப்ளை செய்தார்களா? என்று விசாரணை நடத்தப்படுகிறது.

தலைமறைவான மற்றொரு நபரான கிதர் முகமது மீது ஏற்கனவே கள்ள நோட்டு வழக்குகள் உள்ளன. அவருக்கும், கேரளாவில் உள்ள சில பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுவதால், பயங்கரவாதிகளுக்கும் கள்ள நோட்டுகள் சப்ளை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. எனவே இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

தலைமறைவாக இருக்கும் சுந்தர், கிதர் முகமதுவும் பிடிபட்டால்தான் கள்ள நோட்டு கும்பல் பற்றிய முழு தகவல்களும் தெரியவரும் என்பதால், அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளனர். இதற்காக கேரளாவுக்கு தனிப்படை விரைந்து இருக்கிறது. இதுதவிர ஆந்திரா, கர்நாடக மாநில போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கும்பல் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து, ஏஜெண்டுகளை அணுகி, ரூ.10 ஆயிரம் நல்ல ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதை பெற்றுக்கொண்டு ரூ.1 லட்சம் மதிப்புக்கு ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் கொடுத்து உள்ளனர். கேரளாவில் இருந்து ரூ.1 கோடிக்கு, ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் கேட்டதாகவும், அதற்காக இரவு பகலாக தயாரித்து வந்ததாகவும், அதற்குள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டதாகவும் கைதான ஆனந்த் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்தை காவலில் எடுத்து விசாரித்தால் கள்ள நோட்டு கும்பல் பற்றி மேலும் பல தகவல்கள் வெளியாகும் என போலீஸ் அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஓரிரு நாளில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.

கள்ள நோட்டு அச்சடிக்க அதிநவீன வழுவழுப்பான உயர்ரக வெள்ளை காகிதங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த காகிதங்களை குஜராத் மாநிலத்தில் இருந்து வாங்கி வந்துள்ளனர். இந்த காகிதம் குஜராத் மாநிலத்தில் தான் இருக்கிறது என்று இந்த கும்பலுக்கு தெரிந்துள்ளதால் குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலுடனும் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

கோவையில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது அம்பலமாகி இருப்பதால், பணம் செலுத்துபவர்களிடம் உஷாராக இருக்குமாறும், கள்ள நோட்டுகளை யாராவது கொண்டு வந்தால் தகவல் தெரிவிக்குமாறும் அனைத்து வங்கிகளையும் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

பண புழக்கம் அதிகம் உள்ள போக்குவரத்து துறை, டாஸ்மாக், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகளை கள்ளநோட்டு கும்பல் குறிவைத்து செயல்படுவதால் அங்கு பணியாற்றும் ஊழியர்களை உஷாராக இருக்குமாறும் போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story