ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான கோவை மாநகராட்சி பெண் ஊழியர் பணியிடை நீக்கம்


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான கோவை மாநகராட்சி பெண் ஊழியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 4 Jun 2018 4:30 AM IST (Updated: 4 Jun 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான மாநகராட்சி பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மற்றொரு பெண் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

கோவை,

கோவை கணபதி, உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 35). இவர் அதே பகுதியில் 3 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தொழில் கூடம் கட்டியிருந்தார். இந்த கட்டிடத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் மையம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

இந்த கட்டிடத்துக்கு வரி விதிப்பு பெற மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தை கடந்த சில நாட்களுக்கு முன் அணுகினார். அப்போது மண்டல அலுவலகத்தில் உதவி வருவாய் அதிகாரியாக உள்ள காளம்மாள், பெண் ஊழியர் (பில் கலெக்டர்) மாலா (50) ஆகியோர் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர்.

அதற்கு சிவகுமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறி உள்ளார். அப்போது காளம்மாளும், மாலாவும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால்தான் வரி விதிக்கப்படும். இல்லாவிட்டால் நிராகரித்து விடுவோம் என கூறி உள்ளனர். இதனை தொடர்ந்து சிவகுமாரும் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டார்.

இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் படி மாலாவிடம், சிவகுமார் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாலாவை கையும் களவுமாக கைது செய்தனர். உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் பணிக்கு வரவில்லை. எனவே அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார்.

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மாலா லஞ்ச வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜான்மினோ முன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது, ‘காளம்மாள் மற்றும் மாலா லஞ்சம் கேட்டு பேசிய ஒலிப்பதிவு சி.டி. ஆதாரம் உள்ளது. இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். தேவைப்பட்டால் குரல் பரிசோதனை மூலம் குற்றத்தை நிரூபிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் மட்டுமின்றி மற்ற மண்டலங்களிலும் ஆயிரம் சதுர அடிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்பது நடைமுறையாக பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது மாலாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்ததை தொடர்ந்து மற்ற மண்டலங்களில் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில் மாலா வாங்கிய லஞ்ச பணத்தில் மேல் அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கும் என கூறப்படுகிறது. எனவே லஞ்சம் வாங்கிய மேல் அதிகாரிகள் மத்தியிலும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கி கைதான மாலா மீது, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர். இந்த அறிக்கையின்படி மாலாவை மாநகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. காளம்மாள் கைதாகாததால் அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட மாட்டார் என்றும் வழக்கு விசாரணைக்கு பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story