சேனாபதியில் ஜல்லிக்கட்டு: காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர் 11 பேர் காயம்


சேனாபதியில் ஜல்லிக்கட்டு: காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர் 11 பேர் காயம்
x
தினத்தந்தி 4 Jun 2018 4:15 AM IST (Updated: 4 Jun 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

சேனாபதியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். அப்போது காளைகள் முட்டியதில் 11 வீரர்கள் காயமடைந்தனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள சேனாபதியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400 காளைகள் பங்கேற்றன. அதேபோல் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

ஊரின் வடக்கு தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளையும், தொடர்ந்து மற்ற காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் முடிந்தால் பிடித்து பார் என்று சவால் விடும் வகையில் வீரர்களை களங்கடித்தன. சில காளைகள் வாடிவாசலில் இருந்து எல்லைக்கோட்டை நோக்கி விரைந்து சென்றன. சில காளைகள் மாடுபிடி வீரர்களை முட்டி தூக்கி வீசிவிட்டு ஆக்ரோ‌ஷமாக எல்லைக்கோட்டை கடந்து சென்றன.

இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் கல்லக்குடியை சேர்ந்த மணி(வயது 21), லால்குடியை சேர்ந்த ராகுல்(21), கள்ளூரை சேர்ந்த கண்ணன்(20), பூதலூரை சேர்ந்த ராஜா(22) உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அப்பகுதியில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் நாற்காலி, சைக்கிள், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர். மேலும் சேனாபதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.


Next Story