தடை காலம் அமலில் இருப்பதால் மீன்கள் விலை கடும் உயர்வு வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனை


தடை காலம் அமலில் இருப்பதால் மீன்கள் விலை கடும் உயர்வு வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனை
x
தினத்தந்தி 4 Jun 2018 4:15 AM IST (Updated: 4 Jun 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் பெரம்பலூரில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெரம்பலூர்,

ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சென்னை, கடலூர், புதுக்கோட்டை, ராமேசுவரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் உள்பட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பெரம்பலூர் சிறு வியாபாரிகள் மீன்களை கொள்முதல் செய்து வந்து பெரம்பலூரில் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பெரம்பலூர் நகரில் உள்ள மீன் கடைகளில் கிலோ ரூ.150-க்கு விற்ற ரோகு வகை மீன் தற்போது ரூ.180-க்கும், கிலோ ரூ.170-க்கு விற்ற கட்லா மீன் ரூ.200-க்கும், கிலோ ரூ.170-க்கு விற்ற பாப்பு லெட் மீன் ரூ.180-க்கும், கிலோ ரூ.800-க்கு விற்ற வஞ்சிரம் மீன் ரூ.900-க்கும், கிலோ ரூ.300-க்கு விற்ற சீலா மீன் ரூ.350-க்கும் விற்கப்படுகிறது. மேலும் அயிலைபாறை மீன் கிலோ ரூ.250-க்கும், கொடுவா பாறை ரூ.250-க்கும், தேங்காய் பாறை ரூ.200-க்கும், நெத்திலி ரூ.250-க்கும், இறால் ரூ.300-க்கும், அயிலைசம்பா ரூ.120-க்கும், மத்தி ரூ.120-க்கும், சங்கரா ரூ.250-க்கும், பிளாச்சி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கண்ணாடி பாறை கிலோ ரூ.350-க்கும், கிளி மீன் ரூ.300-க்கும், விறால் ரூ.500-க்கும், உயிர்மீன் (மயிலை) ரூ.150-க்கும், வாழை மீன் ரூ.350-க்கும், பால்சுறா, வஞ்சிரம் பாறை ரூ.400-க்கும், நண்டு ரூ.250-க்கும், புளூ நண்டு ரூ.450-க்கும், கடல் வவ்வால் ரூ.450-க்கும், கடல் விறால் ரூ.350-க்கும், கடல் கெழுத்தி ரூ.300-க்கும், அயிலை ரூ.250-க்கும், ஜிலேபி ரூ.130-க்கும், பங்கஸ் வகை மீன் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மீன்களின் விலை அதிகரித்தது குறித்து பெரம்பலூரை சேர்ந்த பெண் மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனால் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கண்மாயில் பிடிக்கப்படும் கெண்டை, கட்லா மீன்களை மொத்த வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைகாலம் முடிந்த பின்னரே மீன்களின் விலை கணிசமாக குறையும்” என்றார். இந்நிலையில் மீன் கடைகளுக்கு மீன் வாங்க வந்தவர்கள், மீன்கள் விலை அதிகமாக இருந்ததால் குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்றனர். 

Next Story