வில்லியனூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள்கள் மோதி பெண் போலீஸ் சாவு


வில்லியனூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள்கள் மோதி பெண் போலீஸ் சாவு
x
தினத்தந்தி 4 Jun 2018 4:15 AM IST (Updated: 4 Jun 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் பணிக்குச் சென்ற பெண் போலீஸ் மோட்டார் பரிதாபமாக இறந்தார்.

வில்லியனூர்,

புதுவை மாநிலம் கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகள் பூங்குழலி (வயது 24). ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

பூங்குழலி நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் வீட்டில் இருந்து ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு புறப்பட்டு வந்தார். வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்திற்கு வந்தபோது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி ஹெல்மெட்டை கழற்றி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஹெல்மெட்டை தலையில் அணிந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பூங்குழலி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதில் தூக்கி வீசப்பட்ட பூங்குழலி பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூங்குழலி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story