காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்


காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Jun 2018 4:15 AM IST (Updated: 4 Jun 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை,

குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க இப்பகுதி மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பின்னர் மணல் அள்ள தடைகோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இதனால் கரூர் மாவட்டம் மாயனூர் முதல் திருச்சி மாவட்டம் பகுதி வரை காவிரி ஆற்றில் மணல் அள்ள நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாயனூர் பகுதியில் மட்டும் மணல் குவாரி அமைக்கப்பட்டது. இருப்பினும் குளித்தலை காவிரி ஆற்று பகுதியில் சில இடங்களில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது. சிலர் காவிரி ஆற்றிலிருந்து இரு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி விற்று வருகின்றனர். மணல் கடத்தலை தடுக்க முந்தைய கரூர் மாவட்ட கலெக்டர் மூலம் 30 சிறப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டது. ஆனாலும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி நள்ளிரவில் குளித்தலை அருகேயுள்ள குறப்பாளையம் காவிரி ஆற்றுப்பகுதியில் சிலர் ஒரு டிப்பர் லாரியில் மணல் ஏற்றி கடத்த முயன்றுள்ளனர். லாரியை கரைக்கு எடுத்துச்செல்லும் வழியில் லாரி புதரில் சிக்கிக்கொண்டது. இதனால் லாரியை அங்கேயே விட்டுவிட்டு மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற குளித்தலை போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இரு சக்கர வாகனங்கள் மூலம் நடைபெற்று வந்த மணல் கடத்தல், லாரிகளில் கடத்தி செல்லும் அளவிற்கு வந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவிரி ஆற்றங்கரை பகுதியில் பொக்லைன் எந்திரம் மற்றும் கூலி ஆட்கள் மூலம் திருட்டுத்தனமாக மணல் அள்ளி லாரிகளில் ஏற்றி சிலர் கடத்திவருவதாகவும் கூறுகின்றனர்.

குளித்தலை காவிரி ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து லாரி கள் , இரு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகளிலும் மணல் கடத்தல் என்பது சகஜமாக நடந்து வருகின்றது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பலரும் இந்த மணல் கடத்தலில் ஈடுபட வாய்ப்புள்ளது. காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மணல் கடத்தலை தடுக்கமுடியும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story