வெடி விபத்தில் 3 பேர் சாவு: மகன் இறந்த துக்கத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை


வெடி விபத்தில் 3 பேர் சாவு: மகன் இறந்த துக்கத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 Jun 2018 4:30 AM IST (Updated: 4 Jun 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

வெடி விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேட்டவலம்,

வேட்டவலம் அருகே நடந்த வெடிவிபத்தில் 3 பேர் பலியான சம்பவத்தில், மகன் இறந்த துக்கம் தாங்காமல் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேட்டவலத்தை அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் கிணறு ஆழப்படுத்தும் பணியில் கெங்கனந்தல் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் சீத்தாராமன், தங்கராஜ், குமார் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சீத்தாராமன் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

வெடிவிபத்தில் சீத்தாராமன் இறந்ததால் அவருடைய தாய் சரோஜா (வயது 66) மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். மனவேதனை தாங்க முடியாமல் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளார்.

இதில் மயங்கிய நிலையில் கிடந்த சரோஜாவை உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அவரது உடலை கெங்கனந்தல் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து வேட்டவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இறந்தவர்களின் சோகத்தை மறப்பதற்குள் சரோஜா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கெங்கனந்தல் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story