4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இ- சேவை மைய கட்டிடம் - திறக்க பொதுமக்கள் கோரிக்கை


4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இ- சேவை மைய கட்டிடம் - திறக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2018 4:45 AM IST (Updated: 4 Jun 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் புதுப்பாளையத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இ-சேவை மைய கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் புதுப்பாளையம். இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 2014- ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் இ- சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த கட்டிடம் திறக்கப்படவில்லை. இதனால் இந்த கட்டிடத்தை சுற்றிலும் முள்புதர்கள் வளர்ந்து கிடக்கிறது.

இதுகுறித்து அந்தியூர் புதுப்பாளையம் கிராம மக்கள் கூறுகையில், ‘கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இ-சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ அதிகரிகள் இந்த கட்டிடத்தை திறக்கவில்லை. இங்குள்ளவர்கள் அரசின் நலத்திட்ட உதவி வேண்டி அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டி உள்ளது. மேலும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்பட பல்வேறு சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பிப்பதற்கு அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. பல கிராமங்களை சேர்ந்தவர்களும் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்துக்கு வருவதால் அங்கு கூட்டம் அதிகமாக உள்ளது. இதன்காரணமாக சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தினசரி கூலித்தொழிலாளர்களே. எனவே இங்குள்ளவர்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்தில் காத்துக்கிடப்பதால் கால விரயம் ஏற்படுவதுடன், வருமானத்தையும் இழக்க வேண்டி உள்ளது.

மேலும் எங்கள் கிராமத்தில் உள்ள இ- சேவை மையம் திறக்கப்பட்டால் அருகில் உள்ள ஆத்தப்பம்பாளையம், கெட்டிசமுத்திரம், கிருஷ்ணபுரம் உள்பட பல்வேறு கிராம மக்களும் பயன்பெற முடியும். எனவே அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள இ- சேவை மைய கட்டிடத்தை திறக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.

Next Story