கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி உள்பட 2 பேர் கைது ரூ.15 கோடி இடத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்


கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி உள்பட 2 பேர் கைது ரூ.15 கோடி இடத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 4 Jun 2018 4:45 AM IST (Updated: 4 Jun 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

ரூ.15 கோடி மதிப்பிலான இடத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்த கணவரை கூலிப்படையை ஏவி கொன்ற மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பர்நாத், 

ரூ.15 கோடி மதிப்பிலான இடத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்த கணவரை கூலிப்படையை ஏவி கொன்ற மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கணவர் மாயம்

தானே மாவட்டம் கல்யாண் கிழக்கு திஸ்காவ் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ஆஷா(வயது40). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த மாதம் 18-ந்தேதி முதல் சங்கர் காணாமல் போய் விட்டதாக கோல்சேவாடி போலீசில் ஆஷா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், ஆஷா மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக சங்கரின் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இடத்தை விற்க எதிர்ப்பு

இதைத்தொடர்ந்து ஆஷாவின் செல்போன் அழைப்பு விவரங்களை போலீசார் ஆராய்ந்தனர். இதில் ஹிமான்சு துபே என்பவர் அடிக்கடி ஆஷாவை தொடர்பு கொண்டு பேசியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதன் விவரம் வருமாறு:-

ஹிமான்சு துபே கூலிப்படையை சேர்ந்தவர் ஆவார். சங்கரின் பெயரில் உள்ள ரூ.15 கோடி மதிப்புள்ள ஒரு இடத்தை கட்டுமான அதிபர் ஒருவரிடம் விற்பதற்கு ஆஷா முடிவு செய்து அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் அட்வான்ஸ் வாங்கி உள்ளார். ஆனால் இதற்கு சங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த ஆஷா கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

இதற்காக ஹிமான்சு துபேவை சந்தித்து பேசினார். அப்போது, சங்கரை கொலை செய்வதற்கு ரூ.36 லட்சம் தருவதாக தெரிவித்த அவர், முதல் கட்டமாக ரூ.4 லட்சம் கொடுத்து உள்ளார்.

பின்னர் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்காக சம்பவத்தன்று சங்கருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.

அடித்து கொலை

அதை குடித்துவிட்டு சங்கர் மயங்கினார். அப்போது, வீட்டிற்கு வெளியே தயாராக இருந்த ஹிமான்சு துபே தனது கூட்டாளிகள் சிலருடன் சங்கரை ஒரு ஆட்டோவில் ஏற்றி வாங்கனி- நேரல் இடையே உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றார். அங்கு வைத்து அவர்கள் மயங்கிய நிலையில் இருந்த சங்கரை இரும்பு கம்பியால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்து உடலை அங்கேயே வீசிவிட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஆஷா, ஹிமான்சு துபே இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சங்கரின் உடல் வீசப்பட்ட இடத்திற்கு சென்று, அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஹிமான்சு துபேயின் கூட்டாளிகளான ஜகன் மாத்ரே, ராஜ்சிங், பிரித்தம் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். கூலிப்படையை ஏவி மனைவியே கணவரை தீர்த்து கட்டிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story