போலியாக பட்டா தயார் செய்து விவசாயிகளிடம் ரூ.23 லட்சம் மோசடி; பட்டதாரி கைது


போலியாக பட்டா தயார் செய்து விவசாயிகளிடம் ரூ.23 லட்சம் மோசடி; பட்டதாரி கைது
x
தினத்தந்தி 4 Jun 2018 4:44 AM IST (Updated: 4 Jun 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே போலியாக பட்டா தயார் செய்து விவசாயிகளிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த வாலிபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் அம்மாபேட்டையில் உள்ள நஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 65). இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், எனக்கு காரிப்பட்டி அருகே உள்ள கருமாபுரம் பகுதியில் அரசின் இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக கூறி ரூ.30 ஆயிரம் பணத்தை, வாழப்பாடி அருகே கருமாபுரத்தை சேர்ந்த சேர்ந்த இளைபெருமாள் என்பவர் வாங்கினார்.

பின்னர் அவர் பட்டா வாங்கி கொடுக்காமல் இருந்து வந்தார். இதனிடையே திடீரென இளையபெருமாள் இறந்துவிட்டார். மேலும் இளைபெருமாள் வீட்டிற்கு சென்று, அவருடைய மகன் தமிழரசன் (37) என்பவரிடம் கேட்டேன். அப்போது அவர் தன் தந்தை வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக கூறினார்.

ஆனால் தமிழரசன் தெரிவித்தப்படி பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வருகிறார். இதுபோல் மேலும் பலரை அவர் ஏமாற்றி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் பட்டா மோசடியின் கீழ் வழக்குப்பதிவு செய்து பட்டதாரியான தமிழரசனை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், சேலம், காரிபட்டி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வாழப்பாடி மற்றும் மின்னாம்பள்ளியில் இலவச வீட்டுமனை பட்டாவை வாங்கி தருவதாக தலா ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கடந்த 2016-ம் ஆண்டு இளையபெருமாள் வசூலித்துள்ளார்.

இவ்வாறு வசூலித்து ரூ.23 லட்சம் மோசடி செய்துள்ளார். பணத்தை வாங்கிய பின் நீண்ட நாட்களாக பட்டா வழங்காததால் குமரேசன் உள்ளிட்ட சிலர் தமிழரசனுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து 5 பேருக்கு மட்டும் சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் கையொப்பமிட்ட பட்டாக்களை தமிழரசன் பெற்று அவர்களுக்கு வழங்கியுள்ளார் என்பது தெரிய வந்தது. இது குறித்து தனிதாசில்தார் அலுவலகத்தில் விசாரித்த போது அங்கு நீங்கள் குறிப்பிட்ட 5 பேருக்கு பட்டா வழங்கவில்லை என தெரிவித்தனர். தமிழரசன் மீது போலியாக பட்டா தயார் செய்து ஏமாற்றி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story