கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணியால் கண்களை கட்டி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணியால் கண்களை கட்டி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2018 4:30 AM IST (Updated: 5 Jun 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, கருப்பு துணியால் கண்களை கட்டிக் கொண்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

தேனி,

34 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கும் உணவூட்டு செலவின மானிய தொகையை உயர்த்த வேண்டும். பெண் சத்துணவு ஊழியர்களுக்கு 9 மாத மகப்பேறு விடுப்பு அரசாணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியர்கள் கருப்பு துணியால் கண்களை கட்டியபடி பங்கேற்றனர்.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பேயத்தேவன் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் கிருபாவதி நன்றி கூறினார்.

இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story