வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி 2 பேர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரும்பாவூர்,
திரிச்சூர் புதுக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 26). இவரிடம் எல்வள்ளி பகுதியை சேர்ந்த அன்வர் (52), சிற்றிலைப்பள்ளியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (56), புதுக்கடு பகுதியை சேர்ந்த கோபி (48) ஆகியோர் மலேசியா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறினார்கள். பின்னர் முதல் கட்டமாக அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு வேலை வாங்கித்தரவில்லை. மேலும் அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாவரட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்வர், பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கோபி (48) என்பவரை தேடி வருகிறார்கள்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 பேரும் சேர்ந்த பலரிடம் மலேசியா நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.