``எங்களை கருணைக்கொலை செய்யுங்கள்`` ஈரோடு கலெக்டரிடம் 2 திருநங்கைகள் மனு
எங்களை கருணைக்கொலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி ஈரோடு கலெக்டரிடம் 2 திருநங்கைகள் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்னவலசு பகுதியை சேர்ந்தவர்கள் ஓவியா, அனு. திருநங்கைகளான இவர்கள் 2 பேரும் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
பாலியல் தொழில் செய்வதாக கூறி போலீசார் எங்களை தொந்தரவு செய்கின்றனர். மேலும் திருடுவதாக கூறி எங்களை மிரட்டி பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். இதனால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறோம். எனவே எங்களை கருணைக்கொலை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
தற்கொலைக்கு முயன்று கையில் வெட்டுக்காயங்களுடன் இருந்த திருநங்கை ஓவியா மற்றும் திருநங்கை அனு ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது, ‘போலீசார் எங்களை பாலியல் தொழில் செய்வதாக கூறி மிரட்டுகின்றனர். உண்மையிலேயே பாலியல் தொழில் செய்பவர்களை கண்டுகொள்வதில்லை. வேலை இல்லாததால் நாங்கள் ஒவ்வொரு கடையாக சென்று வசூல் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றோம். ஆனால் எங்கள் மீது திருட்டு பட்டம் கட்டி அவதூறு பரப்பி வருகின்றனர்.
தொடர்ந்து எங்கள் மீது பொய் வழக்குகளை போட்டு போலீசார் மிரட்டி வருகின்றனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்போவதாகவும் மிரட்டுகிறார்கள். போலீசாருக்கு பயந்து தினமும் உயிர் வாழ வேண்டி உள்ளது. இப்படி பயந்து வாழ்வதற்கு பதிலாக கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று கூறி கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளோம்’ என்றனர்.
கருணைக்கொலை செய்யுமாறு 2 திருநங்கைகள் மனு கொடுத்ததால் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.