குடிநீர் குழாய் அமைக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி 2 பேர் தற்கொலை மிரட்டல்


குடிநீர் குழாய் அமைக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி 2 பேர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 5 Jun 2018 4:30 AM IST (Updated: 5 Jun 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பெருமருதூர் கள்ளர் தெருவில் குடிநீர் குழாய் அமைக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி 2 பேர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவுடையார்கோவில்,

ஆவுடையார்கோவிலை அடுத்த மணமேல்குடி ஒன்றியம் பெருமருதூர் கள்ளர் தெருவில் 2 குடிநீர் குழாய்கள் இருந்தன. அதில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே இருந்த ஒரு குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பெருமருதூரை சேர்ந்த அப்பாத்துரை உள்ளிட்ட சிலர் அப்பகுதியில் மீண்டும் குடிநீர் குழாய் அமைக்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். மேலும், நேற்று முன்தினம் அப்பாத்துரை உள்ளிட்ட சிலர் அப்பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி மற்றும் சண்முகநாதன், தமிழரசன், வெங்கடேசன், ராதா, வைரம் உள்ளிட்டோர் குடிநீர் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பாத்துரையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகுடி போலீசில் அப்பாத்துரை புகார் கொடுத்தார். ஆனால் புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை பெருமருதூர் பகுதியை சேர்ந்த முனியன்(வயது 60), சுரேஷ்(30) ஆகியோர் சிறுவரையில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி, கள்ளர் தெரு பகுதியில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். அப்பாத்துரையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த நாகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முனியன், சுரேஷ் ஆகியோர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story