சிவகங்கையில் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிவகங்கையில் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குழந்தைகளுக்கு வழங்கும் சத்துணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் சத்துணவு கூடங்களில் காலியாக உள்ள சமையலர், அமைப்பாளர் பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், சட்டசபையில் நாளை(புதன்கிழமை) நடைபெற உள்ள சத்துணவு மானிய கோரிக்கையின்போது சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீமைச்சாமி, மாநில துணைத்தலைவர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், பழனியப்பன், மலர்கொடி, முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் பொருளாளர் பானுமதி நன்றி கூறினார்.