ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலையில் தீவிபத்து
ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் தீயில் எரிந்து நாசமாயின.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே முறம்பு ஆசிலாபுரம் பகுதியில் மோகனாராஜா என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு ஆலை உள்ளது. மேலும் அங்கேயே பொருட்கள் ஏற்றுமதி செய்யும் குடோனும் இயங்கி வருகிறது. தற்போது இந்த ஆலையை ராம்ஜி என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக அங்குள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் எதிர்பாராத விதமாக ஆலை குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் பற்றி எரிந்த தீ, சிறிது நேரத்தில் மளமளவென பரவி குடோனில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகளில் பிடித்து எரிந்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததை பார்த்த, அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. இதனைத்தொடர்ந்து தொழிலாளர்கள், ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு தொழிலாளர்கள் வருவதற்குள் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி எரிந்து நாசமாயின.
அதன்பினர் தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 20–க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால் ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 9 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. பின்னர் 50–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீவிபத்தின்போது ஏற்பட்ட புகையானது, வானளவு எழுந்ததால் அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் பதறினர். வானுயர எழுந்த கரும்புகையினை ராஜபாளையம் பகுதியில் இருந்து பார்க்க முடிந்தது. சுமார் 8 மணி நேரம் போராடி ஆலையில் எரிந்த தீயை தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர்.
இந்த பயங்கர தீவிபத்தில் ஆலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்கு பைகள், பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்து குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.