மதுரையில் பழிக்குப்பழியாக தொடர் சம்பவங்கள்: தி.மு.க. பிரமுகரின் உறவினர் வெட்டிக் கொலை
மதுரையில் பழிக்குப் பழியாக நேற்று தி.மு.க. பிரமுகரின் உறவினர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவருடைய மகன் வேல்குமார்(வயது 27) சுமைதூக்கும் தொழிலாளி. இவர் தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியின் உறவினர். இவர் மீது அந்த பகுதி போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இரவு இவர் வீட்டின் முன்பு நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் சிலர் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் வேல்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.
தகவல் அறிந்ததும் கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் வேல்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும் போது, “தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமிக்கும், அ.தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர் ராஜபாண்டிக்கும் இடையே உள்ள பகையின் காரணமாக இருதரப்பிலும் பழிக்குப் பழியாக தொடர்ந்து கொலைகள் நடந்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு ராஜபாண்டி மகனை வி.கே.குருசாமி தரப்பினர் கடத்திச் சென்று எரித்துக் கொலை செய்தனர். அதன் தொடர்ச்சியாக வி.கே.குருசாமி தரப்பை சேர்ந்த வேல்குமாரை, ராஜபாண்டியன் கூட்டாளிகள் கொலை செய்திருக்கலாம் எனக்கருதுகிறோம். இந்த கொலையில் ராஜபாண்டிக்கு ஆதரவாக அட்டாக்பாண்டியின் கூட்டாளி சபா ரத்தினம் உள்ளிட்ட சிலர் உதவி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்று தெரிவித்தனர்.