மதுரையில் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் மகன் வெட்டிக்கொலை
மதுரையில் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை அய்யர்பங்களா ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் ஜெயசீலன், ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவருடைய மகன் சிபிராஜ் (வயது 23), என்ஜினீயரிங் படித்து விட்டு பெங்களூருவில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் பாலாஜி (27). இமயம் நகரைச் சேர்ந்த இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு பனங்காடி பொட்டகுளம் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் சிபிராஜ் தனது மற்றொரு நண்பர் கணேசனின் சகோதரி திருமணத்துக்கு சென்றுள்ளார். அதே திருமண விழாவில் பாலாஜியும் கலந்துகொண்டார். இரவு வீட்டிற்கு திரும்பும் போது பாலாஜி மோட்டார் சைக்கிளில் சிபிராஜை உடன் அழைத்து சென்றார்.
அவர்கள் இருவரும் பனங்காடி சோதனைச்சாவடி அருகே பொட்டகுளம் வேதவள்ளிநகரில் உள்ள முனியாண்டி கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாலாஜி அங்கிருந்த அரிவாளை எடுத்து சிபிராஜை சரமாரியாக வெட்டினார். பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு சிதைத்து, அருகில் உள்ள காலி இடத்தில் வீசி விட்டு தப்பிச் சென்று விட்டார்.
அந்த வழியாக சென்றவர்கள் சிபிராஜ் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே கூடல்புதூர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சிபிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பாலாஜியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பாலாஜியும், அவருடைய காதலியும் போனில் பேசியுள்ளனர். அந்த ஆடியோ பதிவினை சிபிராஜ் முகநூலில் (பேஸ்புக்) பதிவு செய்து இருவரையும் கேலி செய்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் தான் கொலை நடந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.