புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய உடன் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கை நகல்களை முதல்–அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அப்போது சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் குறுக்கிட்டு, மக்கள் நலத்திட்டங்கள் எதையும் இந்த அரசு செய்யவில்லை. ஆட்சி அமைத்து 24 மாத காலத்தில் 6 மாதம் மட்டுமே அரிசி போடப்பட்டுள்ளது என்று கூறினார்.
அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் எழுந்து பேனர்களை தூக்கி காட்டினர்.
அதில் ‘இலவச அரிசி எங்கே, முதியோர் பென்சன் எங்கே, ஏமாற்றாதே, ஏமாற்றாதே மக்களை ஏமாற்றாதே’ என்று எழுதப்பட்டு இருந்தது. பின்னர் அவர்கள் 4 பேரும் சபாநாயகர் இருக்கை நோக்கி சென்றனர். அவர்களை சபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் சபாநாயகரின் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை சபை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. கவர்னர், முதல்–அமைச்சர் இடையேயான அதிகார மோதலால் அரசு நிர்வாகம் இரு பிரிவாக செயல்படுகிறது. பல துறைகளில் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. நடைமுறையில் உள்ள மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை. பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படவில்லை. மக்களை பாதிக்கும் குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி போன்றவைகள் குறித்து சட்டசபையில் எந்த வித விவாதத்திற்கும் கொண்டு வராமல் புதிய வரிகள் மற்றும் வரி உயர்வுகள் மட்டும் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.
ஆட்சி அமைந்து 24 மாதம் ஆன நிலையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச அரிசி திட்டத்தை மாதந்தோறும் செயல்படுத்தப்படவில்லை. 7 மாதங்கள் மட்டுமே அரிசி போடப்பட்டுள்ளது. முதியோர், விதவைகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை வழங்கக்கோரி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆட்சி அமைந்த 2 வருடத்தில் இந்த திட்டத்தில் புதிய பயனாளிகள் ஒருவருக்குக் கூட தரப்படவில்லை. கடந்த ஆண்டு சட்டசபையில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு பென்ஷன் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்து இருந்தார். ஆனால் செயல்படுத்தப்படவில்லை.
உப்பு, சப்பில்லாத கவர்னர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் விதத்தில் சட்டசபை நேரத்தை வீணடிப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. உருப்படியான மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விவாதத்திற்கு அனுமதிக்காதது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். எங்களது ஒத்திவைப்பு பிரச்சினையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாததால் மக்கள் நலன் கருதி காங்கிரஸ் அரசை கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் வெளிநடப்பு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.