கருப்பு கொடியுடன் ஊர்வலமாக சென்று பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ. சட்டசபைக்குள் நுழைய முயற்சி, 320 பேர் கைது
கருப்பு கொடியுடன் ஊர்வலமாக சென்று சட்டசபைக்குள் நுழைய முயன்ற பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ. உள்பட 320 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை மாநில சட்டசபைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மேலும் 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்துக்கொள்ளலாம். இவர்களை மாநில அரசின் சிபாரிசின்பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நியமிப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி உரிமையாளர் செல்வகணபதி ஆகிய 3 பேரை மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.
இதை எதிர்த்து முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 22–ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும். அவர்களை ஏற்க மறுத்து சபாநாயகர் வெளியிட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால தடை கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது. ஆனால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 26–ந் தேதி புதுவை சட்டசபை கூட்டம் கூடியது. அப்போது வந்த அவர்கள் சபை காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரும் சட்டசபைக்கு வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் நுழைவுவாயில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை நீதிபதிகள் அடுத்த மாதத்திற்கு (ஜூலை) தள்ளி வைத்தார்.
இதற்கிடையே புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்காததால் கூட்டத் தொடரில் நாங்கள் கலந்து கொள்வோம் என்று பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் அறிவித்தனர். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் காவல்துறையின் கிழக்கு சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் போராட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சுதேசி மில் அருகே கூடினர். அங்கிருந்து அவர்கள் சட்டசபைக்குள் நுழையும் நோக்கத்துடன் ஊர்வலமாக சென்றனர். பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் மறைமலை அடிகள்சாலை, அண்ணாசாலை வழியாக சென்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கருப்பு கொடியை கையில் ஏந்திய படி சென்றனர்.
ஊர்வலம் ரத்னா தியேட்டர் அருகே சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பா.ஜ.க.வினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 97 பெண்கள் உள்பட 320 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி ஆகிய 2 பேரும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்பாக கோர்ட்டிற்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து சாமிநாதன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை கூட புதுவை அரசு மதிக்கவில்லை. எங்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க கோரி பேரணியாக வந்த எங்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுவை சட்டசபையில் ஜனநாயக படுகொலை நடக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் புதுவை அரசு மதிக்கவில்லை. மத்திய உள்துறையின் உத்தரவையும் மதிக்கவில்லை. மத்திய அரசின் எல்லா திட்டத்திற்கும் தடையாக உள்ளது. கொலை, கொள்ளை, ஏ.டி.எம். மோசடி என பல்வேறு குற்றசம்பவங்கள் புதுவையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்தும், சட்டமன்றத்தில் எங்களை அனுமதிக்காதது குறித்தும் நாங்கள் ஜனாதிபதியிடம் புகார் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.