நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2018 4:15 AM IST (Updated: 5 Jun 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் நெல்லை மாவட்டம் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிச்சுமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோவில்பிச்சை முன்னிலை வகித்தார்.

சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்புகால முறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்களுக்கு வழங்கும் உணவூட்டு செலவீன மானிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாத காலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, வருவாய்த்துறை அலுவலர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் பால்துரை ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் வீரராஜ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிஇருந்தனர். 

Next Story