ஏரியில் கழிவுநீர் கலக்க செய்ததாக 13 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை


ஏரியில் கழிவுநீர் கலக்க செய்ததாக 13 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Jun 2018 4:30 AM IST (Updated: 5 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

நங்கவள்ளி ஏரியில் கழிவுநீர் கலக்க செய்ததாக 13 சாயப்பட்டறைகளை இடித்து அகற்றி அதிகாரிகள் நட வடிக்கை எடுத்தனர்.

மேச்சேரி,

நங்கவள்ளி பேரூராட்சியில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் இயங்கி வருவதாக பல்வேறு புகார்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து வந்தன. குறிப்பாக இந்த சாயப்பட்டறை கழிவுகள் நங்கவள்ளி ஏரியில் கலப்பதால் தண்ணீர் மாசுபட்டு வருவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் இந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் மாசுபட்டு வருவதையொட்டி பொதுமக்கள் புகாரின் பேரில், மேட்டூர் உதவி கலெக்டர்(பொறுப்பு) ராமதுரைமுருகன், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் மேட்டூர் தாசில்தார் அறிவுடைநம்பி, நங்கவள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் மகாதேவன் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று நங்கவள்ளி பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது தோப்புத்தெரு, பஜனை கோவில் தெரு, வள்ளுவர் தெரு, தேவாங்கர் தெரு, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி இயங்கிய 13 சாயப்பட்டறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். மேலும் பேரூராட்சி பணியாளர்கள் சாயப்பட்டறைகளில் இடிக்கப்பட்ட பொருட்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

வருங்காலங்களில் அனுமதியின்றி இயங்கும் மற்றும் ஏரியில் கழிவுநீர் கலக்கும் சாயப்பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story