குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகப்பட்டு பெண் உள்பட 2 பேரை தாக்கிய 4 பேர் கைது


குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகப்பட்டு பெண் உள்பட 2 பேரை தாக்கிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2018 4:30 AM IST (Updated: 5 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லி அருகே குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகப்பட்டு பெண் உள்பட 2 பேரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கெங்கவல்லி,

கெங்கவல்லி அருகே தெடாவூர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு ஆணும், பெண்ணும் சந்தேகப்படும்படி நின்றிருந்தனர். இதைப்பார்த்ததும் அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு சோமர்பேட்டையைச் சேர்ந்த மஞ்சுநாத் (வயது 34) என்பதும், அவருடன் நின்ற பெண் யார்? என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே 2 பேரும் குழந்தைகளை கடத்த வந்திருப்பவர்கள் என பொதுமக்கள் சந்தேகப்பட்டனர். குழந்தையை கடத்த வந்ததாகவும் வதந்தி பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மஞ்சுநாத்தையும், அந்த பெண்ணையும் தாக்கினர். இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். இதனால் மஞ்சுநாத்தை ஆத்தூர் அரசு மருத்துவமனையிலும், அந்த பெண்ணை சேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து தெடாவூர் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் கெங்கவல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மஞ்சுநாத்தையும், அந்த பெண்ணையும் தாக்கியதாக தெடாவூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (38), அசோக்குமார் (29), கங்காதரன் (38), செல்வம் (40) ஆகிய 4 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மஞ்சுநாத்தும், அந்த பெண்ணும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று கெங்கவல்லி போலீசார் எச்சரித்து உள்ளனர். 

Next Story