சூளகிரி பகுதியில் கனமழையினால் புதிய தரைப்பாலம் சேதம் கிராமமக்கள் பாதிப்பு


சூளகிரி பகுதியில் கனமழையினால் புதிய தரைப்பாலம் சேதம் கிராமமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 5 Jun 2018 4:30 AM IST (Updated: 5 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி பகுதியில் பெய்த கனமழையினால் புதிய தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் கிராமமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடுவதும், வெள்ள நீரில் வாகனங்கள் தத்தளித்தவாறு செல்வதும், மின்சாரம் துண்டிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை சூளகிரி மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை பெய்தது. நேரம் செல்ல, செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. கனமழையின் காரணமாக, கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அட்டகுறுக்கியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், இரவில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சூளகிரி அருகே சக்கார்லு- மைலேபள்ளி இடையே தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் பெய்த கனமழையினால், ஓடையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், தரைப்பாலம் அமைக்க அடுக்கி வைக்கப்பட்டிருந்த குழாய்கள் மற்றும் மணல் மூட்டைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

மேலும் புதிதாக கட்டப்பட்டு வந்த தரைப்பாலமும் சேதமடைந்தது. இதனால் கிராமமக்கள் மீண்டும் 4 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் சேதமடைந்ததால் கிராமமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு தரைப்பாலம் அமைப்பதற்கு பதிலாக, உயர்மட்ட பாலம் கட்ட, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் சூளகிரி பகுதியில் நேற்று மாலை கனமழை பெய்தது. இந்த மழையினால், மருதாண்டபள்ளி கிராமத்தில் உள்ள மின் கம்பம் சாய்ந்தது. இதனால் மின் கம்பிகள் தரையில் படும் வகையில் தாழ்வாக தொங்கியது. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

Next Story