துமகூரு அருகே கார் டயர் வெடித்து விபத்து; 2 வாலிபர்கள் சாவு
துமகூரு அருகே கார் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். நண்பனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு திரும்பியவர்களுக்கு இந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.
பெங்களூரு,
துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர்கள் ரஞ்சித்(வயது 25) மற்றும் சஞ்சய்சிங்(20). இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் வசிக்கும் தனது நண்பனின் பிறந்தநாளை கொண்டாட நேற்று முன்தினம் பாவகடாவில் இருந்து காரில் பெங்களூருவுக்கு வந்திருந்தனர். அவர்களுடன் பாவகடாவை சேர்ந்த குமார், பிரசாந்த், அப்பாஸ் ஆகியோரும் பெங்களூருவுக்கு வந்திருந்தார்கள். நண்பனின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு நேற்று அதிகாலையில் 5 பேரும் பாவகடாவுக்கு காரில் புறப்பட்டார்கள். காரை ரஞ்சித் ஓட்டினார்.
துமகூரு மாவட்டம் கொரட்டகெரே அருகே தன்னேனஹள்ளி கிராமத்தையொட்டி உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ரஞ்சித்தின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கி முற்றிலும் சேதம் அடைந்தது.
இதனால் காரை ஓட்டிச் சென்ற ரஞ்சித், முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சஞ்சய்சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்கள். குமார், பிரசாந்த், அப்பாஸ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி அறிந்ததும் கோலால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணையில், காரை அதிவேகமாக ரஞ்சித் ஓட்டிச் சென்றதும், அந்த சந்தர்ப்பத்தில் டயர் வெடித்ததால் விபத்து நடந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோலால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story