மூளை ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு


மூளை ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 5 Jun 2018 12:20 PM IST (Updated: 5 Jun 2018 12:20 PM IST)
t-max-icont-min-icon

மனித உடல் இயக்கம் மொத்தத்துக்கும் அடிப்படையானது மூளை. அந்த மூளையின் உதவியுடன் மனிதன் பல அற்புதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உள்ளான்.

மூளை தொடர்பான ஆய்வுகள் மற்றும் புரிதலில் நாம் பெரிதும் பின்தங்கியே இருக்கிறோம்.

இதற்கு, குறிப்பிட்ட மூளை உயிரணுக்கள் மற்றும் மூளை பாகங்களின் செயல்பாடு ஆகியவை தொடர்பான தகவல்களை சேகரிக்க வேண்டும். மேலும், இந்த ஆய்வுக்கு மூளையுடன் சில மருத்துவக் கருவிகளை இணைக்க மண்டை ஓட்டில் ஓட்டை போட்டு மூளைக்குள் மின்முனைகளை பொருத்தியாக வேண்டும்.

ஆனால், மூளைக்குள் மின்முனைகளை பொருத்துவது என்பது விளையாட்டான காரியமல்ல. ஏனென்றால், மூளைக்குள் பொருத்தப்படும் மின்முனைகள், மூளை உயிரணுக்களை அழிப்பதோடு, மூளையின் நோய் எதிர்ப்பு மையத்தையும் தூண்டி விடுகிறது.

இதன் காரணமாக, மூளை உயிரணுக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சிக்கலான மூளை ஆய்வுகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள் பல வருடங்களாக முயன்று வருகின்றனர். அந்த முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள கார்னெகி மெல்லான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், நரம்புகளுடன் ஒட்டிக்கொண்டு அவற்றுடன் தொடர்பை ஏற்படுத்தி அவற்றின் செயல்பாடுகளை பதிவு செய்யும் மின்முனைகள் நிறைந்த சிலிக்கான் ஜெல்லி (ஹைட்ரோ ஜெல்) ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் ராணுவ ஆய்வு நிறுவனமான ‘டர்பா’ (DARPA)-வின் நிதி உதவியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரோஜெல், பூனையின் முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டார்சல் ரூட் கேங்க்ளியான் (dorsal root ganglion) எனும் ஒரு நரம்புக் குவியலுடன் ஒன்றி அதன் உயிரணுக்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கத்தியின்றி ரத்தமின்றி (மூளை அறுவை சிகிச்சை செய்யாமலேயே) மூளை உயிரணுக்களுடனான தொடர்பை இந்த ஜெல்லி ஏற்படுத்துகிறது. மேலும், அவற்றின் செயல்பாடுகளை முழுமையாக பதிவு செய்யவும் உதவுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இதன் மூலமாக, மூளை உயிரணுக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், மூளையின் நோய் எதிர்ப்பு மையமும் தூண்டப்படாமல் மிகவும் சுலபமாக மூளை உயிரணு செயல்பாடுகளை பதிவு செய்ய முடியும். அதோடு மூளையின் இயக்கம் தொடர்பான புரிதல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹைட்ரோ ஜெல்லின் உதவியுடன் பாதுகாப்பான ‘நரம்பு உட்பொருத்தி’ (neural implants) ஒன்று உருவாக்கப்பட்டது மட்டுமல்லாமல், பல மூளை நோய்கள் மற்றும் குறைபாடுகள் குறித்த மேலதிக புரிதலும் பின் விளைவுகள் ஏதுமின்றி ஏற்படும் என்கிறார் இதனை உருவாக்கிய கார்னெகி மெல்லான் நிறுவனத்தின் பொறியியலாளர் கிரிஸ் பெட்டிங்கர்.

முக்கியமாக, மூளையின் உயிரணுக்கள் இறந்துபோனால் அந்த இடத்தை நிரப்ப புதிய உயிரணுக்களை உற்பத்தி செய்யும் திறன் மனித மூளைக்கு உண்டா இல்லையா என்பது குறித்த தெளிவான ஆய்வு முடிவுகள் இதுவரை இல்லை. இந்த நிலையில், தலையில் ஓட்டைகள் போட வேண்டிய அவசியமில்லாத மற்றும் மூளையின் உயிரணுக்களை அழிக்காத இந்த ஹைட்ரோ ஜெல் போன்றதொரு நரம்பு உட்பொருத்தி மிகவும் அவசியம் என்றும் கூறுகிறார் பெட்டிங்கர்.

மின்முனைகள் போன்ற அந்நிய பொருட்களை மூளைக்குள் செலுத்துவதன் காரணமாக தூண்டப்படும் மூளையின் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் அந்த மின்முனைகளை சேதப்படுத்துகின்றன. சேதமடைந்த மின்முனைகள் மூளை செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை துல்லியமாக பதிவு செய்ய முடியாமல் தவறான தகவல்களையே பதிவு செய்கின்றன. இதனால் நரம்பியல் ஆய்வுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்த ஹைட்ரோ ஜெல் பயன்பாடு மூலமாக இந்த நடைமுறை சிக்கல்கள் அனைத்தும் தவிர்க்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது பூனை மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஹைட்ரோ ஜெல் தொடர்பான ஆய்வுகள் தொடக்கநிலையில் இருப்பதால், விரைவில் மேற்கொள்ளப்படவிருக்கும் மனித-ஹைட்ரோ ஜெல் ஆய்வுகள் நம்பகமான முடிவுகளை உருவாக்கும் பட்சத்தில், இந்த ஹைட்ரோ ஜெல்லானது நரம்பியல் மருத்துவத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

Next Story