பிளஸ்-2வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் என்ன படிப்புகளை தேர்வு செய்யலாம்?


பிளஸ்-2வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் என்ன படிப்புகளை தேர்வு செய்யலாம்?
x
தினத்தந்தி 5 Jun 2018 12:35 PM IST (Updated: 5 Jun 2018 12:35 PM IST)
t-max-icont-min-icon

போட்டிகள் மிகுந்த இந்த உலகில், குறைந்த மதிப்பெண் பெறுவதை பல மாணவ மாணவிகள் அவமானமாக கருதுகிறார்கள். சிலர் விபரீத முடிவைத் தேடிக் கொள்கிறார்கள். அது தவறாகும்.

மதிப்பெண் குறைவதால் வாழ்க்கையில் எதுவும் முடிந்துவிடப் போவதில்லை. மதிப்பெண் குறைவால் உங்கள் எதிர்பார்ப்பு பொய்யாகி இருக்கலாம், ஆனாலும் எதிர்காலத்தை பிரகாசமாக்கிக் கொள்ள, நிச்சயம் நிறைய வழிகள் உள்ளன. குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், அடுத்ததாக எந்தப் படிப்பை தேர்வு செய்தால் எளிதாக படித்து, நிறைவாக வாழலாம் என்பதை பார்ப்போம்...

பேஷன் டிசைனிங்...

உடைகளை நேர்த்தியாக அணிய உங்களுக்குப் பிடிக்குமா? புதிய புதிய மாடல்களில் உடைகளை தேடிப்பிடித்து அணிவதை விரும்புவீர்களா? அப்படியென்றால் நீங்கள் பேஷன் டிசைனிங் துறையை தேர்வு செய்யலாம். அது உங்கள் ஆர்வத்துக்கு தீனி போடுவதாக அமைந்து, நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வைத்து புதுமை படைக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே இந்த படிப்பை தேர்வு செய்யலாம். இதில் டிப்ளமோ படிப்பு மற்றும் பட்டப்படிப்புகளும் உள்ளன. பல்வேறு உட்பிரிவுகளில் முதுநிலை படிப்பு களும் இருக்கின்றன.

போட்டோகிராபி


ஏராளமானவர்களின் பொழுதுபோக்கு கலையாக இருக்கும் போட்டோகிராபியை ஒரு படிப்பாகவும் தேர்வு செய்து படிக்க முடியும். நீங்கள் விதவிதமாக செல்பி எடுப்பதையும், புதிய உடை உடுத்தியதும், வித்தியாசமான இடத்தை கண்டதும் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் கொண்டவராக இருந்தால் உங்களுக்கும் போட்டோகிராபி படிப்பு நிச்சயம் பிடிக்கும். உருவங்கள், கோணங்கள், வண்ணங்களின் மீதான உங்கள் கவனம் உங்களை புகைப்பட கலையில் உச்சம் தொட வைக்கும். இதிலும் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகள் உள்ளன. போட்டோகிராபி பட்டப்படிப்பு முடித்து, சினிமட்டோகிராபியில் டிப்ளமோ அல்லது முதுநிலை படிப்பு படிப்பவர்கள், சினிமாத் துறையில் வாய்ப்பு பெற முடியும். இந்த படிப்பை தேர்வு செய்யவும் மதிப்பெண் சதவீதம் எதுவும் தடையாக இருப்பதில்லை.

நடிப்பு, நடனம், இசை...

படிப்பில் கவனம் குறைந்தவர்கள், அதிகமாக தேர்வு செய்து படிப்பதுடன், சீக்கிரமே பலரும் அறிந்த பிரபலமாக உருவெடுப்பது இந்த வகை கலைப்படிப்புகளை தேர்வு செய்யும்போதுதான். நடிப்பு, நடனம், இசைத் துறை படிப்புகளுக்கு நல்ல புரிதல் திறன் அவசியம். போட்டிகள் நிறைந்த இந்த துறையில் கொஞ்சம் திறமையைக் காட்டி முன்னுக்கு வந்துவிட்டால் நீங்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையலாம். இதிலும் டிப்ளமோ படிப்புகள், பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் உள்ளன.

ஏர் ஹோஸ்டஸ்


‘குரூவ்’ அல்லது ‘ஏர் ஹோஸ்டஸ்’ எனப்படும் விமான பணிப்பெண் படிப்பு நல்ல கவுரவமும், வருவாயும் பெற்றுத் தரும் படிப்பாகும். நல்ல தோற்றப் பொலிவும், பேச்சுத் திறனும் இருந்தாலே இந்தத் துறையில் சாதித்துவிடலாம். டிப்ளமோ படிப்பாகவும், பட்டப் படிப்பாகவும் இதை படிக்க முடியும். ஏராளமான கல்வி நிறுவனங்கள் இந்த படிப்பை டிப்ளமோ படிப்பாக வழங்குகின்றன. விமான போக்குவரத்துத் துறை நாளுக்கு நாள் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி வரும் இந்த காலத்தில், உலகம் முழுவதும் விமான போக்கு வரத்து சேவையில் பணி வாய்ப்பை பெற முடியும்.

மாஸ் கம்யூனிகேசன்

நீங்கள், புதிய படைப்புகளை உருவாக்கும் திறன், தீவிர ஆர்வம், தைரியமான மனநிலை கொண்டவர்கள் என்றால் மாஸ் கம்யூனிகேசன் எனப்படும் ஊடகத்துறை படிப்பை தேர்வு செய்யலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊடகத்துறை மறுமலர்ச்சி கண்டு வருகிறது. வலைத்தள ஊடகங்கள் கணக்கற்று பெருகி வருகின்றன. எனவே வேலைவாய்ப்பை பெறுவது எளிது. சமூக அந்தஸ்து நிறைந்த ஊடகத்துறை பணிகளை பெற இந்த படிப்பை தேர்வு செய்து படிக்கலாம்.

ஆக்குபேஷனல் தெரபி


உயிரியல் அடங்கிய அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்து படித்தவர்கள் இந்த பட்டப்படிப்பை தேர்வு செய்யலாம். மருத்துவம் சார்ந்த இதை அறிவியல் பட்டப்படிப்பாக படிக்க முடியும். இதற்கு நீட் தேர்வு அவசியமில்லை. வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் 12-ம் வகுப்பு படித்து 45 முதல் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இந்த படிப்பை தேர்வு செய்ய முடியும். பல்வேறு துறைகளில் இதற்கான பணிவாய்ப்பு பெறவும் முடியும்.

தொழில்நுட்ப படிப்புகள்

பிளஸ்-2வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் போன்ற அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளையும் தேர்வு செய்து படிக்கலாம். இந்த படிப்புகள் எளிதாக வேலைவாய்ப்பு பெற்றுத் தரவும், சுயதொழில் தொடங்கவும் கைகொடுக்கும்.

நீங்கள் விளையாட்டுப் பிரியராக இருந்தால் விளையாட்டுத் துறையிலும் படித்து முன்னேறலாம். வெப்டிசைன், அனிமேசன் போன்ற கணினிநுட்ப படிப்புகளையும் படித்து சாதிக்கலாம். சுற்றுலாத்துறை சார்ந்த ‘டிராவல் அண்ட் டூரிஸம்’ படிப்பையும் படித்து நல்ல வேலைவாய்ப்பு பெறலாம்! 

Next Story