கிரிக்கெட்டை அச்சுறுத்தும் சூதாட்ட பூதம்


கிரிக்கெட்டை அச்சுறுத்தும் சூதாட்ட பூதம்
x
தினத்தந்தி 5 Jun 2018 3:13 PM IST (Updated: 5 Jun 2018 3:13 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கிரிக்கெட்டை ரசிக்க பெரும் பட்டாளமே இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பின்றி அத்தனை பேரையும் கிரிக்கெட் ஜுரம் பிடித்திருக்கிறது.

வேறு எந்த விளையாட்டுக்கும் இல்லாத அளவுக்கு இளம்பெண்கள் பலரும் கிரிக்கெட்டை ரசித்து பார்க்கிறார்கள்.

தமக்கு பிடித்தமான வீரர்களை ஹீரோக்களாக நினைத்து அவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்க பள்ளி, கல்லூரி, அலுவலங்களுக்கு கூட விடுப்பு எடுத்து விட்டு டி.வி. முன் தவமிருக்க தொடங்கி விடுகிறார்கள். ஸ்மார்ட் போன்களிலும் நேரலையாக கிரிக்கெட்டை பார்க்கும் வசதி வந்துவிட்டது.

ஒருபுறம் கிரிக்கெட் பெரும் வளர்ச்சி அடைந்து வந்தாலும், தனது ரசிகர் கூட்டத்தை விரிவடைய செய்து கொண்டு இருந்தாலும், கிரிக்கெட்டை அச்சுறுத்தும் பூதமாக சூதாட்டம் புகுந்து விட்டது. கிரிக்கெட்டில் சூதாட்டம் இப்போது தொடங்கியதில்லை. கடந்த 1983-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றிய பிறகு தான் படிப்படியாக சூதாட்டம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது.

அந்த சமயத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் கோதாவில் குதித்தால், ஏதோ இருநாடுகளும் போரில் களம் இறங்குவதாகத்தான் ரசிகர்கள் கருதினார்கள். எப்படியாவது தங்கள் நாட்டு அணி வென்றாக வேண்டும் என பிரார்த்தனை செய்ய தொடங்கிவிடுவார்கள். இன்றைக்கும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது நட்சத்திர வீரர்கள் சரியாக சோபிக்காவிட்டால் அவ்வளவு தான். அவர்களை வசை பாடவும், நன்றாக விளையாடினால் அவர்களை தூக்கி வைத்து கொண்டாடவும் தொடங்கி விடுகிறார்கள். இது தான் சூதாட்ட கும்பல் கோடி, கோடியாக பணம் குவிக்க காரணமாக இருந்தது.

1990-ம் ஆண்டு இறுதியில் இந்தியா-தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அப்போதைய இந்திய அணியின் கேப்டன் அசாருதீனுக்கும், தென்னாப்பிரிக்காவின் கேப்டன் ஹன்சிகுரேன்சிக்கும் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

2000-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஜய் ஜடேஜா, அஜய்சர்மா, வேகப்பந்து வீச்சாளர் மனோஜ் பிரபாகர் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதே கால கட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் சலீம் மாலிக் ஆயுள் கால தடையை ஏற்க வேண்டிய நிலை வந்தது.

கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்துல் ரகுமானுக்கு, அந்நாட்டு சூதாட்ட கும்பலிடம் தொடர்பு இருந்ததால் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு இந்திய அணியுடன் நடந்த ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் 53 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுப்பதாக சூதாட்ட சதியில் ஈடுபட்டதற்கு 6 மாத தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், 5 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட சதியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டு அந்த அணி 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.

டெல்லியில் சாதாரண வங்கி ஊழியராக இருந்த முகேஷ்குமார் குப்தா கிரிக்கெட் சூதாட்டத்தில் நுழைந்து யாருக்கும் சந்தேகம் வராதபடி பெரிய நகை வியாபாரியாக உருவெடுத்து விட்டார். 1988-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை சூதாட்டத்தில் ஈடுபட்ட இவர் பல கோடிகளை குவித்தார்.

இவரை போல சஞ்சிவ் சாவ்லாவும் சூதாட்டத்தில் கிட்டிய பணத்தை அள்ளிக் கொண்டு லண்டன் பறந்து அங்கேயே செட்டிலாகிவிட்டார். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பின்னணியில் இருப்பதும் சி.பி.ஐ. இயக்குனர் மாதவன் குழுவினர் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இப்படி கிரிக்கெட் சூதாட்ட பட்டியல் நீள்கிறது. சூதாட்ட சர்ச்சை தொடர்கிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கடந்த மாதம் 15-ந்தேதி மராட்டிய மாநிலம் தானே போலீசார் சோனு ஜலான் தலைமையிலான 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் போது ரூ.100 கோடிக்கும் மேல் சூதாட்டம் நடந்து இருப்பதும், இதில் வெளிநாடுகளை சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

குறிப்பாக, பிரபல இந்தி நடிகரான சல்மான்கானின் தம்பியும், நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ்கானுக்கும் சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக கைதானவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

இதன்பின்னர் போலீசார் அர்பாஸ்கானை நேரில் வரவழைத்து சூதாட்ட தரகர் சோனுஜலானுடன் நேருக்கு நேர் அமர வைத்து விசாரித்தனர். அதில் கடந்த 5 ஆண்டுகளாக ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதையும், ரூ.2.80 கோடியை இழந்ததாகவும், இந்த ஆண்டு ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிரிக்கெட்டில் சூதாட்டம் புகுந்ததை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தாங்கள் நேசித்த கிரிக்கெட்டை வெறுக்கத்தொடங்கினர். ரசிகர்கள் பட்டாளம் சுருங்கத் தொடங்கியது. ரசிகர்களை மீண்டும் கிரிக்கெட் பக்கம் ஈர்பதற்காகத்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பின்னாளில் அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் கிரிக்கெட் பக்கம் ரசிகர்கள் திரும்பினர். ஆனாலும் கிரிக்கெட்டை சூதாட்டம் துரத்தத்தான் செய்கிறது. இதுதான் வேதனை அளிக்கிறது.

ஆனால்.. நம்பிக்கை தான் வாழ்க்கை. அது போல கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் சூதாட்ட கும்பல் வலைவிரிக்கும் ஆசைக்கு இடம் கொடுக்காமல் விளையாட வேண்டும். அது தான் கிரிக்கெட்டுக்கு நல்லது. இது போன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூதாட்ட தரகர் மட்டுமின்றி சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் கிரிக்கெட்டை அச்சுறுத்தும் சூதாட்டம் என்ற பூதத்தை அப்புறப்படுத்தி விடலாம்.

-ஸ்ரீமன் 

Next Story