முறை தானா...? போலீசுக்கு கறை தானா...?


முறை தானா...? போலீசுக்கு கறை தானா...?
x
தினத்தந்தி 5 Jun 2018 3:33 PM IST (Updated: 5 Jun 2018 3:33 PM IST)
t-max-icont-min-icon

அண்மையில் தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவம் தேவையற்றது, நியாயமற்றது.

அதை விவரிப்பதற்கு முன்பு காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் அவரது திறமையான காவல்துறைத் தலைவர் பொன்மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினர், ராஜராஜசோழனின் அசல் சிலைகளை மீட்டு வந்ததற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.

காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த காலத்திலிருந்து, ஜெயலலிதா என்னைத் தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குனராக நியமித்தது வரையில், 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பதவிகளில் பெற்ற அனுபவமும், பட்டறிவும் எனக்கு உண்டு.

என்னுடைய கள அனுபவம் மூலம் நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், தமிழகத்தில் 90 சதவீத மக்கள் சட்டத்தைப் பின்பற்றுபவர்களாகவும், 10 சதவீதம் மக்கள் வேண்டுமானால் சட்டத்தை மீறுபவர்களாகவும் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.

காவல்துறையினரின் 95 சதவீத துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நேர்மையாக நிகழ்ந்தவையல்ல என்பதையே என் அனுபவம் மீண்டும் உணர்த்துகிறது. இதனைத் தெளிவாக என் புத்தகத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

எப்படியிருந்தாலும், நாம் நடவடிக்கை எடுப்பது, நம்முடைய மக்கள் மீது தான் என்பதையும், இந்தியா-பாகிஸ்தான் அல்லது இந்தியா-சீன எல்லையிலிருக்கும் பகைவரையோ, காஷ்மீரை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளையோ அல்லது சத்தீஸ்கர் நக்சலைட்டுகளையோ அல்ல என்பதை காவல்துறையினர் கட்டாயமாக உணர வேண்டும்.

தவிர்க்க இயலாத காரணங்களுக்காக, காவலர்கள் துப்பாக்கிகளை கையிலெடுத்த விவகாரங்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, நான் பத்திரிகைகளில் எழுதிய விதிவிலக்கு நிகழ்வுகள் நிச்சயமாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு, 1965-ம் ஆண்டில் இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தின் போது, துணை ஆய்வாளர்கள் வெங்கடேசன், ராமசாமி ஆகியோர் உயிருடன் கொளுத்தப்பட்டு, அவர்கள் இறந்ததை உறுதி செய்யும் வகையில் அவர்களின் உடல்கள் மீது மாட்டுவண்டியை ஏற்றிக் கொன்ற சம்பவத்தைக் கூறலாம்.

அதைப்போல, அப்போதைய மேட்டூர் காவல்துறைத் துணை கண்காணிப்பாளர் அன்னசாமியை நிர்வாணப்படுத்தி ஓடவிட்டதையும், போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் காவிரி ஆற்றில் விழுந்து, பின்னர் அவமானத்தால் உயிரிழந்த சம்பவத்தையும் கூறலாம்.

இதனை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், அரசின் நிலையற்ற கொள்கையையும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டை அரசு எடுத்திருக்க வேண்டும் என்பதையுமே இது காட்டுகிறது.

எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதைப் போல், தொடக்கத்திலேயே, அப்போதைய காவல் துறைத் தலைவர் அருளிடம் எந்த நிலையிலும் காவலர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்தக்கூடாதென்று அப்போதைய அரசு தெரிவித்திருந்தது. இது உண்மையே.

ஏனெனில், காவல் துறைத் தலைவர் அருளின் சுற்றறிக்கையை நானே வாசித்துள்ளேன். காவல் துறையினர் மிதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பின்னரே, அப்போதைய அரசு தனது தவறை உணர்ந்து கொண்டு, காவல்துறைக்கு சுதந்திரத்தை அளித்தது. அப்போதைய பிரதமர் பண்டித நேரு இந்தி திணிக்கப்படமாட்டாது என்று உறுதி அளித்த பின்னரே, இந்த முழு விவகாரமும் முடிவுக்கு வந்தது.

காவலர்களின் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நியாயப்படுத்துவதற்கான பிற முக்கியமான நேர்வுகள் உண்டு. சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த வீரப்பனை அடக்க அப்போதைய காவல்துறைத் தலைவர் விஜயகுமாரும், கோவையில் பெண் குழந்தையைக் கடத்திக் கற்பழித்தவரை ஒடுக்க சைலேந்திரபாபுவும் எடுத்த நடவடிக்கைகளை நான் பாராட்டினேன்.

காவல் துறையினர் துப்பாக்கிகளைப் பயன்படுத்திய ஏனைய இழிவான வரலாறுகள் உள்ளன. 1995-ம் ஆண்டில், காவல் துறைத் தலைமை இயக்குனராக நான் இருந்தபோது, நெல்லை மாவட்டத்தில் நடந்த சாதிக் கலவரத்தில் காவல்துறையினர் துப்பாக்கிகளை நாடினர். அப்போது ஒரு ஆயுதப்படைத் துணை ஆய்வாளர், முற்றிலும் அநாகரிகமான முறையில் கூட்டத்தை நோக்கி இலக்கின்றிச் சுட்டார். இதில் 3 மாதக் குழந்தையும், தாயும் கொல்லப்பட்டனர்.

இந்நிகழ்வு என்னை உலுக்கியது. அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், காவல் படையின் தலைவர் மன்னிப்பு கேட்டதை என்னால் நினைவுகூர இயலுகிறது. எனக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.

தூத்துக்குடியில், இருக்கும் நிலைமை முற்றிலுமாக மாறுபட்டதாகும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கிளர்ச்சி, பல நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றது. நாளுக்கு நாள் வலுப்பெற்று வந்தது.

கிளர்ச்சியாளர்களை ஆரம்ப நிலையிலேயே கைது செய்து அவர்களைப் பாளையங்கோட்டை அல்லது மதுரை மத்திய சிறையில் காவலில் வைப்பது குறித்த உறுதியான கொள்கைகளைக் காவல்துறையும் அரசும் உருவாக்கியிருக்க வேண்டும். ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்ற கொள்கை முடிவை அரசு எடுத்திருக்க வேண்டும்.

இதனைச் செய்யாமல், போராட்டத்தில் ஊடுருவியவர்களின் முயற்சியைத் தடுக்க வேண்டியது காவல்துறையினரின் கடமையாக உள்ளபோது, போராட்டத்தில் சட்ட விரோத சக்திகள் ஊடுருவி அழிவை ஏற்படுத்தின என்று கூறுவது சிறிதளவிலும் பொருத்தமில்லாதது.

கூட்டம் அதிகமானதால், காவல்துறையினர் அதிகாரம் பெற்று, வேடன், குருவிகளைச் சுட்டுத்தள்ளுவது போல், மக்களை அவர்கள் சுட்டுத்தள்ள ஆரம்பித்தனர். மனித உயிர்கள் குறித்து எவ்வித அக்கறையுமில்லாமல், கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளிய காட்சிகள், தலைமைத்துவம் தனது நிலையிலிருந்து மிகவும் கீழே இறங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

இதனைக் கூறுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் எந்தவொரு தலைமைப்பண்பையும் என்னால் காண இயலவில்லை.

இனியாவது, காவல்துறை தலைமை பாடம் கற்றுக் கொண்டு, தவறுகள் நடைபெறுவதைத் தடுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து காவல் துறையால் திறம்பட செயல்பட இயலாது. காவல் துறையினருக்குக் கூட்ட நெரிசல் மேலாண்மை குறித்த தீவிர உடலியல் பயிற்சி அளிக்க வேண்டிய நேரமிது.

- வி.வைகுந் ஐ.பி.எஸ்., முன்னாள் காவல்துறைத் தலைமை இயக்குனர், தமிழ்நாடு

Next Story