சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2018 4:15 AM IST (Updated: 5 Jun 2018 10:50 PM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவட்டார்,

திருவட்டார் அருகே வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உள்பட்ட 3–வது வார்டில் ஒட்டலிவிளை, மத்திவிளை, கடம்பவிளாகம் போன்ற பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும்– குழியுமாக காணப்படுகிறது.

மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது, பள்ளிகள் திறந்த நிலையில் மாணவ–மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.

இந்தநிலையில், நேற்று காலை 8 மணியளவில் ஆண்கள், பெண்கள், மாணவ–மாணவிகள் என ஏராளமான பொதுமக்கள் ஒட்டலிவிளை சந்திப்பில் கூடினர். அவர்கள் சாலையை சீரமைக்க கோரி மறியலில் ஈடுபட்டனர். அத்துடன் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி அனிதா, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலை விரைவில் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

 இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story