வரதராஜபுரத்தில் குடோனில் தீ விபத்து


வரதராஜபுரத்தில் குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 6 Jun 2018 4:00 AM IST (Updated: 5 Jun 2018 10:55 PM IST)
t-max-icont-min-icon

வரதராஜபுரத்தில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து எரியத்தொடங்கின.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் முடிச்சூர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது 58). இவருக்கு சொந்தமான காலி இடம் மற்றும் கட்டிடங்கள் மணிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் உள்ளது. இந்த காலி இடத்தை வரதராஜபுரம் மகாலட்சுமி நகரில் வசிக்கும் ஏழுமலை (வயது 34) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்த இடத்தில் ஏழுமலை குடோன் அமைத்து கடந்த 7 ஆண்டுகளாக கட்டிட வேலைக்கு தேவைப்படும் பொருட்களான மரப்பலகை, கம்பு, தகரம் போன்ற பொருட்களை வைத்து வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தார்.

இந்த குடோனில் இருந்து நேற்று அதிகாலை 4 மணியளவில் கரும்புகை வந்தது. பின்னர் குடோனில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து எரியத்தொடங்கின.

இதில் குடோனில் இருந்த மரப்பலகைகள், கம்புகள், ஒரு மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்தன. இதை பார்த்த பொதுமக்கள் தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீ விபத்து ஏற்பட்ட உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story